`டார்கெட்’ எடப்பாடி… ஓ.பி.எஸ் – தினகரனின் சபதம் தேர்தலில் கைகொடுக்குமா?!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழ்நாடு அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கி இருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக-வில் இருந்து ஓரம்கட்டப்பட்ட டிடிவி தினகரனும், ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னால் ஓரம்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓரணியில் இணைந்து இருக்கிறார்கள்.

ஓபிஎஸ்

தற்போது இருவரும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளதாக கூறிவருகிறார்கள். இந்நிலையில், தேனி மாவட்ட அ.ம.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ், “எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்யவோம். அவரை எந்த தேர்தலிலும் வெற்றி அடையவிடமாட்டோம்” என்று பேசி இருந்தார். இதன்மூலம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ் மற்றும் தினகரனின் இலக்கு வெற்றியல்லாது, எடப்பாடியை தாக்குவது’ என்பது தெளிவாகி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து ஓ.பி.எஸ்., தினகரனுக்கு இணைப்பு பாலமாக இருக்கும் புள்ளிகளிடம் பேசினோம்… “ஓ.பி.எஸ் – டிடிவி தினகரன் இணைந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது 99 சதவிகிதம் உறுதியாகிவிட்டது. டிடிவிக்கு தனிச்சின்னம் கிடைக்கும்பட்சத்தில் அவரது வேட்பாளர்கள் அந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதேபோல, ஓ.பி.எஸ் தனது தரப்பு வேட்பாளர்களை சுயேட்சையாக அல்லது பா.ஜ.க-வின் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்கபோகிறார்.

இந்த கூட்டணி தென்மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை பெறும் என்று நம்பிக்கை இருக்கிறது. இதன்மூலம், எடப்பாடியின் வெற்றி கனவை தகர்க்கமுடியும். ஆனால், எடப்பாடியை வீழ்த்தவேண்டுமென்ற என்ற நோக்கத்தில் தேர்தலை சந்தித்தால் அது நிச்சயமாக நல்ல பலனை தராது என்பதே நிர்வாகிகளின் எண்ணமாக இருக்கிறது.

பா.ஜ.க எதிர்ப்பு என்ற ஒற்றை கருத்தை மட்டும் வைத்தே திமுக களமாடுகிறது. அதேபோல, தி.மு.க எதிர்ப்பு என்பதை மட்டுமே வைத்து அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க கூட்டணியில் இருந்து தி.மு.க எதிர்ப்பை பிரதானப்படுத்தினால்தான், வெற்றியை நோக்கி பயணப்படமுடியும். ஆனால், ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி, ‘எடப்பாடி எதிர்ப்பு’ என்று சபதம் எடுத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறார்கள். இது மக்கள் மனதில் இடம்பிடிக்க இயலாத கருத்தாகும். நாம் வெற்றிப் பெறவேண்டும் என்று தேர்தலை சந்திக்கும் கட்சிதான், தேர்தலில் ஜொலிக்கமுடியும். நாம் வெற்றி பெறாவிட்டாலும், எதிரி வெற்றிப் பெறக்கூடாதென்று என்ற எண்ணம் நல்ல முடிவை தந்ததாக வரலாறே கிடையாது.

டிடிவி தினகரன்

எடப்பாடியை மட்டும் டார்கெட் செய்து தேர்தலை சந்தித்தால், முடிவு மிகமோசமாக இருக்கும். இதை ஓ.பி.எஸ்-ஸும் டி.டி.வி-யும் புரிந்து கொள்ளவேண்டும். ஓ.பி.எஸ்ஸுக்கு கட்சி என்று ஒன்று இப்போது இல்லை. இதனால் அவரிடம் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை. ஆனால், டிடிவிக்கு அப்படி இல்லை. அ.ம.மு.க என்ற கட்சியும், அதை நம்பிய நிர்வாகிகளும் இருக்கிறார்கள். கடந்த தேர்தல்களில் கணிசமான ஓட்டு வாங்கி, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை நோக்கி பயணப்படுகிறது.

இந்நிலையில், இதுபோன்ற சபதம் கட்சியை அழித்துவிடும். இதை உணர்ந்து டிடிவி செயல்படவேண்டும் என்பதுதான் அக்கட்சியினரின் விருப்பமாக இருக்கிறது.” என்றனர் கொதிப்புடன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.