குளிர்காலத்தில் அதிகமாக குளிராமல் இருக்க மது அருந்துவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். மது அருந்துவது குளிரைத் தவிர்த்து கதகதப்பைத் தருவதாகவும் நினைத்துக் கொள்வர். திரைப்படங்கள், டிவி, சோஷியல் மீடியா எனப் பலவற்றில் இதே கருத்துகளைப் பலர் தெரிவிப்பதைப் பார்த்திருப்போம்.
மது அருந்துவது உடலை வெப்பமாக வைத்திருக்குமா என சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் பாபுவிடம் கேட்டோம்.
”பொதுவாக குளிர்காலத்தில் உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் சற்று சுருங்கும். இவ்வாறு சுருங்குவதன் மூலம் வெளிப்புறத்தின் குளிர் உடலை பாதிக்காத வகையில் அதுவே பாதுகாக்கும்.
மது அருந்தும்போது உடலில் இரண்டு வகை மாற்றங்கள் ஏற்படும். ஒன்று மனது சம்பந்தப்பட்டது. அதாவது மது அருந்துவது சிலருக்கு ரிலாக்ஸான மனநிலையை உருவாக்கும். இதற்கு உடலிலுள்ள வெவ்வேறு சுரப்பிகளே காரணம். இரண்டாவது ரத்தக்குழாய்கள் சுருங்காமல் தடுத்து அவற்றைத் தளர்வாக்கும். உடல் குளிர்ந்து இருக்கும் சமயத்தில் ரத்தக்குழாய்கள் சுருங்க வேண்டியது அவசியம்.
மது அருந்தும்போது சிறிது நேரம் உடல் வெப்பமாக இருப்பது போன்ற மாயையை உருவாக்கும். உண்மையில் ரத்தக்குழாய்கள் விரிவடைவதால் உடலில் இருந்து அதிக வெப்பம் வேகமாக வெளியேறத் தொடங்கும். இது உடலின் வெப்பநிலையை மேலும் குறைத்து உடலுக்குத் தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது.
இதுதவிர, சிலர் மதுபோதை அதிகமாகி தன்னிலை மறந்து ஆடைகளை அகற்றிவிடவும், சுயநினைவு இழந்து மயங்கி விழவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற செயல்கள் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம். குளிர்காலத்தில் மது அருந்துவது என்பது உடலுக்கு கூடுதல் தீங்கையே விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பியர், ஒயின் போன்ற குறைந்த சதவிகிதத்தில் ஆல்கஹால் சேர்க்கப்படும் மதுவகைகளால் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. மது வகைகளை இரண்டாகப் பிரிக்கலாம். நொதிக்க வைத்து (Fermented) தயாரிப்பது. பார்லி, பழ வகைகள் போன்றவற்றைப் புளிக்கவைத்துத் தயாரிக்கப்படுவது. பியர்,ஒயின் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை. இவற்றில் ஆல்கஹாலின் அளவு குறைவாக இருக்கும்.
இரண்டாவதாக, ‘டிஸ்டிலேஷன்’ (Distillation) முறையைப் பயன்படுத்தி மதுவில் உள்ள ஆல்கஹால் அளவு மேலும் அதிகரிக்கப்படும். அப்படி உருவாகும் மதுவகைகள் தான் ரம், விஸ்கி, வோட்கா போன்றவை. பியர், ஒயின் போன்றவற்றில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும் அவை மது வகைகள் என்பதில் மாற்றமில்லை. எனவே, அவற்றால் உடலுக்குத் தீங்கு இல்லை எனச் சொல்லி விட முடியாது.
குறைந்த அளவு ஆல்கஹால் இருக்கும் மதுவகைகளை அதிக அளவில் அருந்த வாய்ப்புள்ளது. விஸ்கி, ரம் போன்ற வகைகளை ஒன்றிரண்டு கிளாஸ் கணக்கில் அருந்தினால் பியரை பாட்டில் கணக்கில் குடிக்க வாய்ப்புள்ளது. ஆல்கஹால் குறைவாக இருந்தாலும் அருந்தும் அளவு மிக அதிகமாக இருப்பதால் உடல்நலத்தை பாதிக்கவே செய்யும்” எனக் கூறினார்.