கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பழங்குடியின மக்களின் நிலங்களை பறித்துக்கொண்டதாகவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது. அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சந்தேஷ்காளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஷாஜகானின் உதவியாளர்கள், ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ஷேக் ஷாஜகானை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்திய கொல்கத்தா ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட ஷேக் ஷாஜகானை கைது செய்யும்படி உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி எம்.எல்.ஏ. சவுசாத் சித்திக் இன்று சந்தேஷ்காளி கிராமத்தை நோக்கி சென்றார். அவரை அறிவியல் நகரம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தடுப்புச் சட்டத்தின் கீழ் சித்திக் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சந்தேஷ்காளியில் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சித்திக் திட்டமிட்டிருந்தார். போராட்டம் நடத்தும் மக்களையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதனால் அவரை போலீசார் கைது செய்து, போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர்.