5 ஆண்டுகள் உயிருக்கு போராடியவர்: ஹாலிவுட் நடிகர் கென்னத் மிட்செல் காலமானார்

கனடா நாட்டை சேர்ந்தவர் கென்னத் மிட்சல். ஹாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகி வேகமாக வளர்ந்து வந்தார். 'தி ரெக்ரூட்', 'மிராக்கிள் ஹோம்', 'ஆப் தி ஜெயன்ட்ஸ்' உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமானார். 2019ம் ஆண்டு வெளியான 'கேப்டன் மார்வெல்' படத்தில் இவர் ஏற்ற ஜோசப் டான்வெர்ஸ் கதாபாத்திரம், உலகளவில் ரசிகர்களை பெற்று தந்தது. 50க்கும் மேற்பட்ட டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முதுகெலும்பு மற்றும் மூளை நரம்பு செல்கள் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கென்னத் மிட்செல், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். படுத்த படுக்கையில் தொடர்ந்து உயிருக்கு போராடி வந்தார். அவரது உறவினர்கள் அவரை பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் கென்னத் மிட்செல் காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கென்னத் மிட்செல், அன்பான தந்தை, கணவர், சகோதரர், மாமா, மகன் மற்றும் அன்பான நண்பராக வாழ்ந்து காலமானதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். அன்பு, இரக்கம், நகைச்சுவை, உள்ளடக்கம் மற்றும் சமூகத்துடன் நீங்கள் வாழும்போது ஒருவர் எவ்வளவு முழுமையாக இருக்க முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கை ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டுள்ளனர்.

கென்னத் மிட்செல்லின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 'மிக நல்ல நடிகர் நிரந்தர ஓய்வு கொடுத்துவிட்டார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என்று மார்வெல் பட குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கென்னத் மிட்செல்லுக்கு சூசன் மேரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.