இந்திய அணிக்காகப் பல போட்டிகளில் ஆடியிருக்கும் ஹனுமா விஹாரி, ’அரசியல் காரணங்களால்தான் தன்னை ரஞ்சி கோப்பையில் ஆந்திர அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கினர்’ என்று, சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அது கிரிக்கெட் விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் ஹனுமா விஹாரிக்கு ஆதரவாக நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
“நம் பாரதத்திற்காக 16 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி 5 அரை சதங்களை அடித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சிட்னி டெஸ்டில் அவர் விளையாடிதை மறக்க முடியாது. ஆந்திரப்பிரதேச ரஞ்சி அணியின் கேப்டனாக, கடந்த 7 ஆண்டுகளில் ஆந்திரா அணி 5 முறை நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற உதவியிருக்கிறார். உடைந்த கைகள் மற்றும் காயங்களுடன் பாரதத்திற்காகவும், ஆந்திரப் பிரதேசத்திற்காகவும் சிறப்பாகச் செயல்பட்டு, பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
ஆனால், ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறியதால், ஆந்திர கிரிக்கெட் சங்கம் விஹாரியை கேப்டன் பதவியிலிருந்து விலகக் கட்டாயப்படுத்தியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் ஆந்திரப்பிரதேச ரஞ்சி அணியின் கேப்டன் ஹனுமா விஹாரியைவிட, எந்த கிரிக்கெட் பின்னணியும் இல்லாத உள்ளூர் ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி, நமது ஆந்திர கிரிக்கெட் சங்கத்திற்கு மதிப்புமிக்கவராகத் தெரிகிறார். என்ன ஒரு அவமானம் இது?!
திரு.ஜெகன் மோகன் ரெட்டி அவர்களே, நமது ஆந்திர கிரிக்கெட் அணியின் கேப்டனை மாநில கிரிக்கெட் சங்கம் அவமானப்படுத்தியிருக்கிறது. ஆனால், நீங்கள் ‘விளையாடுவோம் வாங்க (Adudam Andhra)’ போன்ற நிகழ்வுகளுக்காகக் கோடிக்கணக்கில் பணம் செலவழிப்பதில் என்ன பயன் இருக்கிறது?
ஹனுமா விஹாரி காரு, நீங்கள் மாநிலத்திற்காகவும் நாட்டிற்காகவும் ஒரு சாம்பியன் வீரராக இருந்திருக்கிறீர்கள். உங்கள் சேவைகளுக்காகவும், ஆந்திராவில் உள்ள இளம் குழந்தைகள் மற்றும் வீரர்களை ஊக்கப்படுத்தியதற்காகவும் நன்றி. அனைத்துத் தெலுங்கு கிரிக்கெட் ரசிகர்களும் எங்கள் மாநில சங்கம் உங்களிடம் நடந்துகொண்ட விதத்திற்காக வேதனை அடைந்துள்ளனர். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். அடுத்த ஆண்டு ஆந்திராவுக்காக நீங்கள் விளையாடுவீர்கள் என்று நம்புகிறேன்” என்று ஹனுமா விஹாரிக்கு தனது ஆதரவை பவன் கல்யாண் தெரிவித்திருக்கிறார்.