பெங்களூரு : பெங்களூரு சர்வதேச திரைப்பட திருவிழாவை, நாளை மறுதினம் முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். பெண் இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் இயக்கிய 10 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
கர்நாடக அரசு சார்பில், பெங்களூரில், 14 ஆண்டுகளாக சர்வதேச திரைப்பட திருவிழா நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், 15வது திரைப்பட திருவிழா நடத்துவது தொடர்பாக, திருவிழாவின் தலைவர் திரிலோக் சந்திரா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
பெங்களூரு விதான் சவுதாவின் பெரிய படிக்கட்டுகள் பகுதியில், வரும் 29ம் தேதி, முதல்வர் சித்தராமையா, திரைப்பட திருவிழாவை துவக்கி வைக்கிறார்.
இம்முறை, மொத்தம் 50 நாடுகளின் 185 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் திரைப்பட இயக்குனர் ஜப்பார் படேல், நடிகர் சிவராஜ்குமார், வங்கதேச நடிகை அஜமேரி பந்தோன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
கன்னட திரையுலகம், 90 ஆண்டுகள் நிறைவு செய்ததன் நினைவாகவும்; மாநிலத்தை, கர்நாடகா என்று பெயர் மாற்றி 50 ஆண்டுகள் நிறைவு செய்ததன் நினைவாகவும், 30 சிறப்பு திரைப்படங்கள் கன்னட பிரிவில் திரையிடப்படுகின்றன.
பெண் இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் இயக்கிய 10 திரைப்படங்களும்; இந்திய திரைப்பட திருவிழாக்களில் இதுவரை திரையிடப்படாத 30க்கும் மேற்பட்ட படங்களும் திரையிடப்படும். மொத்தம், 21 நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், 9 பேர் பெண்கள். பலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
ஓரியன் மால், சாம்ராஜ்பேட்டில் உள்ள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் ராஜ்குமார் பவன், பனசங்கரி சுசித்ரா திரைப்பட அகாடெமி ஆகிய பகுதிகளில் படங்கள் திரையிடப்படும்.
அடுத்த மாதம் 7ம் தேதி விதான் சவுதாவின் மாநாட்டு அரங்கில், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியுடன், 15வது பெங்களூரு திரைப்பட திருவிழா நிறைவுபெறும்.
சினிமா ரசிகர்கள், www.biffes.org என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்