சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மூத்த அரசியல்வாதியும், தயாரிப்பாளருமான பழ. கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் சிவகுமார், பழ நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வயதான ஒருவர் நடிகர் சிவகுமாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்க வந்தார். அப்போது அந்த சால்வையை பிடுங்கி நடிகர் சிவகுமார் தூக்கி வீசிவிட்டுச் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சிவக்குமார். “காரைக்குடி சால்வை விவகாரத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
சால்வையை அணிய வந்தது யாரோ கிடையாது எனது தம்பி… கிட்டத்தட்ட என்னுடைய 50 ஆண்டுக்கால நண்பன் கரீம். பொதுவாக நிகழ்ச்சிகளில் யாராவது சால்வை அணிய வந்தால் அதை நான் அவர்களுக்கே அணிவித்து விடுவேன். சால்வை அணியும் பழக்கம் எனக்குக் கிடையாது. அன்றைக்கு 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 மணி வரைக்கும் நடந்துகொண்டே இருந்தது. கடைசியாகத்தான் நான் பேசினேன்.
மிகவும் சோர்வாகி விட்டது. நான் பேசி முடித்துவிட்டு கீழே வந்தேன். அங்கு எனக்கு சால்வை அணிவது பிடிக்காது என்று தெரிந்த கரீமே கையில் சால்வையை வைத்துக்கொண்டு நின்றார்.
தெரிந்துகொண்டே சால்வையை எடுத்து வந்தது அவருடைய தவறு என்றால் பொது இடத்தில் அதை கீழே போட்டது என்னுடைய தவறுதான். என்னை மன்னித்து விடுங்கள். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, கரீம் மற்றும் நடிகர் சிவகுமார் இருக்கும் பழைய படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.