மதுரை: “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திமுக ஆட்சியில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டதால் புறநோயாளிகள் எண்ணிக்கை 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது” என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.313.25 கோடியில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வகங்கள் அடங்கிய ‘டவர் பிளாக்’ கட்டிடம் மற்றும் உள்பட ரூ.335.24 கோடியில் புதிய மருத்துவத்துறை கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் இந்த புதிய மருத்துவத்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார். மதுரையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குத்துவிளக்கேற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி, மேயர் இந்திராணி, எம்பி.சு.வெங்கடேசன், டீன் ரெத்தினவேலு, எம்எல்ஏ-க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் டாக்டர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள 19,472.09 சதுர மீட்டரில் தரை மற்றும் 6 தளங்களுடன் நவீன மருத்துவசதிகளுடன் கூடிய ‘டவர் பிளாக்’ கட்டிடத்தில் நோயாளிகள் ஒரே இடத்தில் அனைத்து மருத்துவ சிகிச்சையும், பரிசோதனையும் செய்து கொள்ளலாம்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமதாபுரம், நெல்லை, கன்னியாகுமரி உள்பட தென் தமிழகத்தை சேர்ந்த மக்கள் பயன்பெறுகிற வகையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனு. இருதய அறுவை சிகிச்சை, நவீன மூளை அறுவை சிகிச்சை, ரத்த நோய் அறுவை சிகிச்சை போன்ற 22 சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகள் இந்த மருத்துவமனையில் செயல்படுகிறது.
கடந்த 33 மாதங்களுக்கு முன் இந்த மருத்துவமனையில் 3 ஆயிரம் வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு வந்தனர். தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மருத்துவசிகிச்சைகள் மேம்படுத்ப்படுத்தப்பட்டதால் தற்போது புறநோயாளிகள் எண்ணி்க்கை 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது” என்றார்.