காந்திநகர்: இந்திய கடற்படையும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் (என்சிபி) இணைந்து நடத்திய சோதனையில் குஜராத்தின் போர்பந்தர் அருகே சிறிய படகு ஒன்றிலிருந்து சுமார் 3,300 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சமீபத்தில் நடந்த போதைப் பொருள் பறிமுதலில் இதுவே மிகவும் அதிகமானது என்று கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை ஒரு சிறிய கப்பல் ஒன்றை செவ்வாய்க்கிழமை சோதனை செய்தபோது, அதிலிருந்து 3,089 கிலோ சார்ஸ், 158 கிலோ மெத்தாம் பேட்டமின் மற்றும் 25 கிலோ மார்பின் கைப்பற்றப்பட்டன. அந்தப் படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஒரு கிலோ சார்ஸின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.7 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சோதனை குறித்து கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறிய படகு ஒன்றில் இருந்து போதை பொருள்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருள்கள் அளவில் மிகவும் பெரியது. போதைப் பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து நடத்திய கூட்டு முயற்சியால் இது சாத்தியமாகியது. கைப்பற்றிய போதைப் பொருட்களுடன் அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் இந்திய துறைமுகத்தில் உள்ள அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போர்பந்தர் கடலின் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு சிறிய படகு நிற்பது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானம் மூலம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் கடத்துவதாக சந்தேகிக்கப்பட்ட அந்தப் படகை இடைமறித்து விசாரணை நடத்த கப்பல் ஒன்று திசைதிருப்பி அனுப்பப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த வரலாற்றுச் சாதனைக்காக கடற்படை, என்சிபி மற்றும் குஜராத் போலீஸை பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போதைப் பொருள் இல்லாத பாரதம் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை பின்பற்றி நமது அமைப்புகள் மிகப் பெரிய அளவிலான கடல்வழி போதைப்பொருள் கடத்தலைத் தடுத்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடற்படை மற்றும் குஜராத் போலீஸார் இணைந்து நடத்திய பிரம்மாண்டமான சோதனை மூலமாக சுமார் 3,132 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நமது நாட்டை போதை பொருள் இல்லாத நாடாக மாற்றும் அராசாங்கத்தின் உறுதிபாட்டுக்கு இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி ஒரு சான்று. இந்தச் சாதனைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடற்படை மற்றும் குஜராத் போலீஸை நான் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த போதைப் பொருள் சோதனை அரபிக்கடலில் உள்ள சர்வதேச கடல் எல்லைக்கு அருகே நடத்தப்பட்டது என்று குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வாரத்தில் புதுடெல்லி மற்றும் புனே நகரம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 1,100 கிலோ எடை கொண்ட தடைசெய்யப்பட்ட மெபெட்ரோன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் இதை ‘மியாவ் மியாவ்’ என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். சோதனையின்போது, மெபெட்ரோன் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 700 கிலோ மெபெட்ரோன் கைப்பற்றப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின்படி, டெல்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் இருந்து 400 கிலோ செயற்கை ஊக்க மருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.