சூர்யாவின் ‘கங்குவா’ டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இயக்குநர் சிவா, சூர்யா இருவரின் திரைப்பயணத்தில் இந்தப் படம் ஒரு மைல்கல் எனச் சொல்கிறார்கள். ஒவ்வொரு ப்ரேமையும் செதுக்கிவருகிறார்கள். 10 மொழிகளில், 3டி தொழில்நுட்பத்துடன் ரெடியாகிவருகிறது.
இயக்குநர் சிவாவின் முந்தைய படங்களைவிட ‘கங்குவா’ முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகிவருகிறது. படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி தவிர வில்லனாக பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், ஜெகபதிபாபு, நட்டி நட்ராஜ், ‘கே.ஜி.எஃப்’ அவினாஷ், கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, கருணாஸ் என பலர் நடிக்கின்றனர். வசனங்களை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி கேமராவை கவனிக்கிறார். தேவி ஶ்ரீபிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் சூர்யா டப்பிங் பேசியிருக்கிறார். அதனை தொடர்ந்து இதர நடிகர் நடிகைகளின் டப்பிங் வேலைகள் நடந்துவருகின்றன. இன்னொரு பக்கம் டி.ஐ. வேலைகளும் நடக்கின்றன. அதனை சமீபத்தில் சூர்யாவும் பார்வையிட்டு மகிழ்ந்தார். இப்போதைய போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் குறித்து விசரித்ததில் கிடைத்த தகவல்கள்…
”படத்தின் கிளிம்ஸ் வீடியோ, போஸ்டர்களில் காட்சிகள் பிரமாண்டமாக மிரட்ட இருப்பதால், கிராபிக்ஸை வெளிநாட்டில் உள்ள கிராபிக்ஸ் நிறுவனம் பண்ணுகிறதோ என எண்ண வேண்டாம். சென்னையில் உள்ள ஒரு நிறுவனம்தான் கிராபிக்ஸ் வேலைகளைச் செய்துவருகிறது. சென்னையில் உள்ள Lorvin studios தான் கிராபிக்ஸ் செய்துவருகிறது.
கிராபிக்ஸ் நிபுணர்கள் ஹரிஹரசுதன், செல்வா ஆகிய இருவரின் தலைமையில் ஒரு பெரிய டீமே கிராபிக்ஸ் வேலைகளை கவனித்துவருகிறது. இவர்கள் இதற்கு முன் சிவாவின் படங்களில் பணிபுரிந்த டீம் தான் என்றும் சொல்கிறார்கள்.
படத்தின் பெரும்பகுதியான காட்சிகள் போர்க்களம் நிறைந்த காட்சிகள் என்பதாலும், படத்தில் யானை, முதலை, புலி, கழுகு ஆகிய விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றன என்பதாலும் கிராபிக்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது. படம் 10 மொழிகளில் வரவிருப்பதால், கிராபிக்ஸ் பணிகள் சர்வதேச தரத்தில் இருக்க மெனக்கெட்டுவருகிறார்கள். கிராபிக்ஸ் வேலைகள் முடித்த பகுதிகள், உடனடியாக 3டி தொழில்நுட்ப வேலைகளுக்கு அனுப்பி வைத்துவருகிறார்கள். மொத்தப் படமும் 3டி வேலைகள் முடிந்த பிறகே, பின்னணி இசைக்காக தேவிஶ்ரீபிரசாத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றும் சொல்கிறார்கள்.