ஷிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை இன்று காலை முதல் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை அவைக்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உள்பட 15 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகரின் இந்த உத்தரவை அடுத்து அவர்கள் அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நிலையில், 2024-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா செய்தியாளர்ளைச் சந்தித்தார். அப்போது, பாஜக எம்எல்ஏக்கள் 15 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதன் காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பதானியா, “சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் அதனை முன்மொழிந்தார். நேற்று நடந்த எதிர்பாராத சம்பவங்கள்தான் அதற்குக் காரணம்.
பாஜக எம்எல்ஏக்கள் நேற்று அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் அவர்கள் அவைக்குள் இருந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். என்னை தாக்கக்கூடிய சூழலையும் அவர்கள் உருவாக்கினார்கள். அவர்களை அமரும்படி நான் வேண்டினேன். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. அனைத்துமே பதிவாகி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரை தகுதி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தது. அது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் பதானியா, “விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. 6 பேரும் மனு அளித்திருக்கிறார்கள். அது என்னிடம் விசாரணைக்கு வரும்போது, சபாநாயகர் என்ற முறையில் நான் விசாரித்து முடிவெடுப்பேன்” என கூறினார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, “மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 6 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச அரசை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசு 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்யும்.
மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவர், தன்னை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இமாச்சல் பிரதேச மக்கள் அவர்களுக்கு உரிய பதிலை அளிப்பார்கள். அமைச்சர் பதவியில் இருந்து விக்ரமாதித்ய சிங் ராஜினாமா செய்தது குறித்து கேட்கிறீர்கள். நான் அவருடன் பேசினேன். அவர் எனது தம்பியைப் போன்றவர். அவரது ராஜினாமாவை ஏற்பதற்கு எந்த காரணமும் இல்லை. அவருக்கு சில குறைகள் உள்ளது. அவை தீர்க்கப்படும்” என தெரிவித்தார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர், “பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இது இந்த அரசுக்கு அபாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எப்படியோ அவர்கள் பட்ஜெட்டை நிறைவேற்றிவிட்டார்கள். இல்லாவிட்டால் அரசு கவிழ்ந்திருக்கும். இமாச்சல காங்கிரஸ் அரசை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அவர்கள், என்னையும், மேலும் 14 எம்எல்ஏக்களையும் இடைநீக்கம் செய்தனர். எங்களை இடைநீக்கம் செய்துவிட்டு பட்ஜெட்டை நிறைவேற்றி இருக்கிறார்கள்” என கூறினார்.
இதனிடையே, “காங்கிரஸ் மாநில அரசுகளை கவிழ்ப்பது என்ற ஒற்றை வாக்குறுதியுடன் மோடி அரசு இருக்கிறது. அது நிகழ நாங்கள் விடமாட்டோம்” என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அதன் முழு விவரம்: “இமாச்சலில் மாநில அரசை கவிழ்க்க மோடி அரசு தீவிரம்… நாங்கள் விடமாட்டோம்!” – காங்கிரஸ்