ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானம் ஒன்று நேற்று பிற்பகல் பறந்து வந்துள்ளது. மெந்தார் பகுதியில் அந்த ஆளில்லா விமானம் பறந்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் அதனை கவனித்தனர்.
உடனடியாக அந்த டிரோனை நோக்கி துப்பாக்கியால் 12 முறை ராணுவப் படையினர் சுட்டனர். இந்திய படையினரின் இந்த செயலை தொடர்ந்து, அந்த டிரோன் பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பி சென்றது. இதனை தொடர்ந்து டிரோன் மூலம் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்கள் எதுவும் கொண்டுவரப்பட்டதா என்பதை உறுதி செய்வதற்காக அந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடத்தியபோது எதுவும் கிடைக்கவில்லை என ராணுவ படையினர் தெரிவித்தனர்.