இந்திய அணியின் சம்பள பட்டியலில் இருக்கும் வீரர்கள் இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை விளையாடாமல் புறக்கணித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. குறிப்பாக இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் பிட்டாக இருந்தும் ரஞ்சி கோப்பையில் ஆடாமால், நேராக ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இது இந்திய அணி நிர்வாகத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனென்றால் தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து இஷான் கிஷன் திரும்பியதும், ரஞ்சி கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அந்த அறிவுரையை அவர் பின்பற்றவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ரஞ்சி டிராபி விளையாடாமல் பிசிசிஐ சம்பள பட்டியலில் இருக்கும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அத்துடன், அந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நேரடியாக கடிதம் எழுத இருப்பதாக அறிவித்த அவர், எந்த சாக்குபோக்கு காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்தார். இத்தனைக்குப் பிறகு இஷான் கிஷன் ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை. ஸரேயாஸ் அய்யர் சில காரணங்களால் விளையாடவில்லை என்றாலும், இந்த எச்சரிகைக்குப் பிறகு மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், ” டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என ஆர்வம் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும். மற்றவர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்படாது. ரஞ்சி கோப்பை உள்ளிட்ட சிவப்பந்து கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பவர்களுக்கு, இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு எப்படி கொடுப்பது?. அதனால் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட விரும்பாத பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடமில்லை” என்றார்.
அவரின் இந்த பேட்டிக்கு மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில கிரிக்கெட் சங்க தலைவர் அபிலாஷ் காண்டேகர் பேசும்போது, இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு ரஞ்சி கோப்பை. அந்த தொடருக்கு இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த பார்மேட்டை புறகணிப்பவர்களுக்கு எந்த அடிப்படையில் இந்திய அணியில் இடம் கொடுப்பது? என கேள்வி எழுப்பினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ நிர்வாகியாக பணியாற்றுவருமான திலீப் வெங்சர்க்கார் பேசும்போது, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு மதிப்பளிக்காத பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கக்கூடாது. ஐபிஎல் தொடர்களிலும் அவர்களை புறக்கணிக்க வேண்டும் என கூறியுள்ளார். பெயர் குறிப்பிடாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசும்போது, கிரிக்கெட் என்ற விளையாட்டு தான் இங்கு பெரியதே தவிர, வீரர்கள் அல்ல. இந்தியாவில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் பலர் இருப்பதால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்கும் வீரர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பளிக்கப்படாது என்றார்.