புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் சுரங்கங்கள் சட்டவிரோதமாக குத்தகைக்கு விடப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் நாளை (வியாழக்கிழமை) ஆஜராக அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுரங்கங்கள் குத்தகைக்கு விடப்பட்டது தொடர்பாக 5 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கின் விசாரணைக்கு நாளை ஆஜராக உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ இன்று (புதன்கிழமை) சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணை அதிகாரிகள் முன் நாளை ஆஜராக அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிஆர்பிசி பிரிவு 160-ன் கீழ் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பிரிவு, சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க விசாரணை அதிகாரிக்கு உரிமை வழங்குகிறது.
உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ், 2012-13-ல் சுரங்கத் துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார். 2013 பிப்.17ம் தேதி ஒரே நாளில் உத்தரப் பிரதேசத்தின் ஹாமிர்பூர் மாவட்டத்தில் 13 சுரங்க திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இ-டெண்டர் முறையில் அனுமதி வழங்குவதற்குப் பதிலாக, முதல்வர் அகிலேஷ் யாதவின் ஒப்புதலுடன், ஹாமிர்பூர் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இந்த ஒப்புதலை வழங்கி உள்ளார்.
அதேபோல், 2012-16 காலகட்டத்தில், ஹாமிர்பூர் மாவட்டத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தடை உத்தரவை மீறி, பல்வேறு சுரங்க உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, கடந்த 2016-ல் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும், 2019-ல் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களிலும், டெல்லியிலும் சிபிஐ சோதனைகளை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.