தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, வெளித்துறைமுக சரக்குப் பெட்டக முனைமம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைத்தார். குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிய நிலையில், குலசேகரன்பட்டினத்தில் இருந்து ’ரோகிணி 6H- 200’ என்ற ராக்கெட் விண்வெளி ஆய்வுக்காக விண்ணில் செலுத்தப்பட்டது. தூத்துக்குடி, நெல்லைக்கு முதன்முறையாக வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியின் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
9 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 3,000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியின் பெயர் அச்சடிக்கப்படவில்லை. ஆனால், அமைச்சர் கீதா ஜீவனின் பெயர் மட்டும் இடம் பெற்றிருந்தது. தி.மு.க-வினர் தெரிவித்த கண்டனத்தினால் நேற்று இரவோடு இரவாக புதிய அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு, அதில் அமைச்சர் கீதா ஜீவனின் பெயருக்குப் பதிலாக கனிமொழியின் பெயர் இடம் பெற்றது.
பிரதமர் மோடி மேடைக்கு வந்ததும் பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகமாக ‘மோடி’ ‘மோடி’ என கோஷமிட்டனர். இந்த கோஷம் அடங்குவதற்கு நீண்ட நேரம் ஆனது. இதேபோல் மோடி பேசும்போது இடையிடையே பா.ஜ.க-வினர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். நாட்டின் வளர்ச்சியைக் கொண்டாடும் வகையில் அனைவரும் தங்களது செல்போனில் வெளிச்சத்தை ஆன் செய்து காட்டுமாறு தெரிவித்தார். உடனே அனைவரும் எழுந்து நின்று ‘மோடி’ ‘மோடி’ என கோஷமிட்டவாறு செல்போன் வெளிச்சத்தை காண்பித்தனர். துறைமுக சாலையில் நேற்று கனகர வாகன போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது.
மேலும், துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகளும் நடைபெறவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. அழைப்பிதழில் பெயர் போடாததாலும், மேடையில் இருக்கைகள் போடாததாலும் உள்ளூர் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை. நிகழ்ச்சியில் வரவேற்றுப் பேசும்போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களின் பெயரை வாசித்த பிரதமர் மோடி கனிமொழி மற்றும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் பெயரை வாசிக்கவில்லை.
இந்த விழாவில் வெள்ளியினாலான செங்கோல், மோடிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவிற்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் நெல்லைக்கு வந்த மோடி, பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். நெல்லை தனியார் ஓவியப்பள்ளி மாணவர்கள் சிலர், பிரதமர் மோடியின் உருவப்படங்களை ஓவியமாக வரைந்து மோடிக்காக சாலையில் காத்திருந்தனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ-வான விஜயதாரணி, “உலக நாடுகளுக்கே வழிகாட்டும் பிதாமகன் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய மாற்றம், வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதை பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன்.
அதன் வெளிப்பாடுதான் என்னைப் போன்றோர் மாற்றுக் கட்சியிலிருந்து பா.ஜ.க-வில் இணைய காரணம். நம் நாட்டுக்காக பிரதமரின் உழைப்பைப் பார்த்து இன்னும் பலர் பா.ஜ.க-வில் இணைவார்கள். பா.ஜ.க-வில் நான் இணைந்தாலும் என் சொந்த இடத்தில் உள்ளதுபோல பாதுகாப்பாகத்தான் உணர்கிறேன். பா.ஜ.க-வினர் தேசியக்கொடியை மட்டுமல்ல, தெய்வீகத்தையும் போற்றக்கூடியவர்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் சட்டம் ரத்து என பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் நம் பிரதமர்” எனப் பேசினார்.
”தமிழகத்தில் குடும்ப ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. கோபாலபுரத்திற்காக மட்டும் வாழ்பவர்தான் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ஆனால், மக்களுக்காக வாழ்வதும், நாட்டின் வளர்ச்சிக்காக சிந்திப்பது நம் பிரதமர் மட்டும்தான்” என்றார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. மேடை ஏறிய பிரதமர் மோடிக்கு நெல்லை, நெல்லையப்பர் கோயில் தேர் வடிவிலான நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பின்னர் மைக் பிடித்தார் மோடி. அவரது பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. “தமிழக மக்கள் பா.ஜ.க மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழக மக்கள் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய அறிவுடன் இருக்கிறார்கள். அவர்களின் தொலைநோக்கான சிந்திக்கும் நுட்பம்தான் அதற்குக் காரணம். எரிசக்தி உற்பத்தியில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது.
இதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. வெளிநாடுகள்கூட இந்தியாவை உற்றுநோக்குவதற்கு மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதுதான் காரணம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தூரம் குறைவு. இரண்டிற்குமான உறவு அதிகரித்துள்ளது. இந்தியா இன்னும் 100 மடங்கு முன்னேறினாலும், தமிழ்நாடும் 100 மடங்கு முன்னேறும். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களை அளித்துள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு இங்குள்ள மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
மக்களவையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றும்போது வேண்டுமென்றே தமிழ்நாட்டு எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பதில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் குறியாக உள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க இந்த மோடி விடமாட்டார். தமிழகத்தை ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். ஆனால், பா.ஜ.க அப்படியல்ல. நாடு, மக்கள், தேசம் மட்டுமே முக்கியம். தி.மு.க பொய் வேஷம் போடுகிறது. ஆட்சியை பிடிக்க மட்டும் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஸ்டாலினுக்கு உங்கள் வீட்டுப் பிள்ளையின் எதிர்காலத்தைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் வீட்டுப் பிள்ளையின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளையின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். குலசேகரப்பட்டினத்தில் இன்று ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். ஆனால், நாளிதழ்களில் தி.மு.க வெளியிட்டுள்ள விளம்பரத்தில் சீன நாட்டு கொடியைக் குறிப்பிட்டு அந்நாட்டு ராக்கெட் படத்தை போட்டுள்ளார்கள். இதுதான் தி.மு.கவின் தேசப்பற்றா?
அவர்களுக்கு நம் நாடு மீதும், நம் நாட்டு தேசியக்கொடி மீதும் பற்றில்லை, அக்கறையில்லை. கடந்த 10 ஆண்டு ஆட்சி எனக்கு நல்ல பணி அனுபவத்தை கொடுத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை இந்தியாவில் நிறைவேற்ற வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டம் என்னிடம் உள்ளது. தற்போது 5வது இடத்தில் இருக்கும் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு வருவதுதான் என் கனவு. தி.மு.கவும், காங்கிரஸூம் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல் இந்தியாவில் வளர்ச்சிக்கே எதிராக உள்ளது.
தி.மு.க-வும் காங்கிரஸூம் அகற்றப்பட வேண்டிய கட்சிகள், அண்ணாமலை இருப்பதால் பொய் வேஷம் போடுவோரை தமிழகத்தில் இனி நாம் பார்க்க முடியாது. அண்ணாமலை வந்துவிட்டதால் தமிழ்நாட்டில் இனி தி.மு.க இருக்காது. தமிழகத்தில் இனி தி.மு.கவை தேடும் நிலை ஏற்படும். தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக தி.முக என்ன செய்தது… தமிழகத்தில் நிறைவேற்றியுள்ள திட்டங்களைப் பற்றி தி.மு.கவிடம் கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இருக்காது. ஆனால், யார் முதல்வர், எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர் எனக் கேளுங்கள் உடனே பட்டியல் போடுவார்கள். அப்பா பதவியில் இருப்பார் அல்லது மகன் பதவியில் இருப்பார். தி.மு.க என்றாலே குடும்ப ஆட்சிதான்.” என்றார்.