வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: காஷ்மீர் சென்றிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அம்மாநிலத்தின் அழகையும் பெருமையையும் புகழ்ந்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் 50.. ஓய்வுக்கு பின் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார். முதல்முறையாக காஷ்மீர் சென்ற அவர், சுற்றுலா இடங்களை பார்வையிட்டு வருகிறார். உடன் மனைவி அஞ்சலி, மகள் சாரா சென்றனர்.
இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‛‛ காஷ்மீர் எனது நினைவில் ஒரு அனுபவமாக கலந்து இருக்கும். அங்கு எங்கெங்கு காணினும் பனி படர்ந்து இருந்தது. இருப்பினும், காஷ்மீர் மக்களின் தன்னிகரற்ற விருந்தோம்பல் எங்களுக்கு இதமான அனுபவத்தைத் தந்தது. பிரதமர் மோடி, நம் நாட்டில் காண வேண்டியவை நிறைய இருக்கின்றன எனக் கூறியிருந்தார். அது உண்மைதான். இந்த காஷ்மீர் பயணத்தில் அதை உணர்ந்தேன்.
காஷ்மீர் வில்லோ மர கிரிக்கெட் ‛ பேட்’கள் ‛ மேக் இன் இந்தியா’ வுக்கு சிறந்த உதாரணம். ‛மேக் பார் வோர்ல்டு’க்கும் சாட்சி. காஷ்மீர் மர ‛பேட்’கள் உலகம் முழுவதும் பயணிக்கின்றன. இப்போது உலக மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும். காஷ்மீரை காண வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். வியத்தகு இந்தியாவின் விலைமதிப்பற்ற ஆபரணங்களில் காஷ்மீரும் ஒன்று” எனப்பதிவிட்டு உள்ளார். மேலும் தனது பயணம் தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.
பிரதமர் பாராட்டு
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், சச்சினின் வீடியோவை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு கூறியுள்ளதாவது: இதைப் பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கிறது. சச்சினின் ஜம்மு காஷ்மீர் பயணத்தில் இருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள இரு விஷயங்கள் உள்ளன. ஒன்று வியத்தகு இந்தியாவின் பல பகுதிகளைக் கண்டு ரசிக்க வேண்டும். இன்னொன்று ‛மேக் இன் இந்தியா’வின் முக்கியத்துவம். நாம் ஒன்றிணைந்து வளர்ந்த பாரதம், தன்னம்பிக்கை நிறைந்த பாரதத்தை உருவாக்குவோம்” எனக்கூறியுள்ளார்.
பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement