Union Minister Prahalad Joshi calls for no politics in helping the poor | ஏழைகளுக்கு உதவுவதில் அரசியல் வேண்டாம்; மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு

தங்கவயல் ; ”ஏழைகளுக்கு உதவுவதில் அரசியல் வேண்டாம். அனைவருக்கும் வீடு வழங்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியம்,” என, மத்திய சுரங்க துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

தங்கவயல் தங்கச் சுரங்க நிறுவனத்தில் கடைசியாக ஆஜர் பட்டியலில் இருந்த தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகளுக்கான உடைமை சான்றிதழ், தங்கவயல் கே.ஜி.எப்., கிளப் வளாகத்தில் நேற்று வழங்கப்பட்டது.

சுரங்கத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசியதாவது:

நாட்டின் முதல் நீர்மின் நிலையம் உருவானதே, தங்கவயலுக்காக தான். இங்குள்ள மக்களும் தங்கமானவர்கள்.

தங்கச் சுரங்க நிறுவனத்தில் கடைசியாக ஆஜர் பட்டியலில் இருந்த தொழிலாளர்களுக்கு உடைமை சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 2,000 வீடுகளுக்கு வீட்டுரிமை சான்றிதழ் வழங்கப்படுகிறது. இங்குள்ள ஏழைகள் அனைவருக்கும் வீடுகள் வழங்குவதே, பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியம். ஏழைகளுக்கு உதவுவதில் அரசியல் வேண்டாம்.

தங்கச் சுரங்க நிலம் பற்றி முழுமையாக சர்வே நடத்தவில்லை. 3,000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தங்கச் சுரங்க நிலம் பற்றி சர்வே நடத்த மாநில அரசு செயலருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்

தங்கவயல் மேம்பாட்டுக்கும், தங்கச் சுரங்க முன்னாள் தொழிலாளர் வீடுகள் பற்றி என்ன செய்ய வேண்டும் என்பதை காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா கருத்து தெரிவிக்கலாம். இது தொடர்பாக டில்லியில் உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சுரங்கத்துறை அமைச்சக செயலர் பரிதா நாயக், தங்கச் சுரங்க நிறுவன அதிகாரி நன்மதி செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ‘ஆப்சென்ட்’

* தங்க சுரங்க முன்னாள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான உடைமை சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் பிரஹலாத் ஜோஷி படங்கள் இடம் பெற்றிருந்தன. சான்றிதழுடன் இனிப்பு, காரம், சமோசா பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டது* “இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்த நீங்கள், பொறுமையாக இருந்து சான்றிதழ் பெற்று செல்லுங்கள்,” என, மைக்கில் எம்.பி., முனிசாமி அடிக்கடி வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார்* பா.ஜ., நகர, கிராம பகுதியின் தலைவர்களான கமல்நாதன், ஜெயபிரகாஷ் நாயுடு, மாவட்ட பொதுச் செயலர் சுரேஷ் நாராயணா குட்டி ஆகியோர் வி.ஐ.பி., வரிசையில் அமர்ந்திருந்தனர். பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சம்பங்கி, ராமக்கா பங்கேற்கவில்லை* நகர காங்கிரஸ் தலைவர் மதலை முத்து, முன்னாள் நகராட்சித் தலைவர்கள் கே.சி.முரளி, வி.முனிசாமி, நகராட்சி உறுப்பினர்கள் ஜெயபால், கருணாகரன், ஜெர்மன், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.