சிம்லா: “காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் சதியை முறியடித்துள்ளோம். நான் ராஜினாமா செய்யவில்லை. நாங்கள் போராளிகள். நிச்சயமாக பெரும்பான்மையை நிரூபிப்போம்” என்று இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில், இமாச்சலப் பிரதசத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேட்சைகள் கட்சி மாறி வாக்களித்ததை அடுத்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து, காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக பாஜக கூறி வருகிறது. இதனிடையே, பாஜக எம்எல்ஏக்கள் 15 பேர் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து அக்கட்சியினர் ஆளுநரிடம் நேரில் முறையிட்டுள்ளனர். அதேவேளையில், காங்கிரஸ் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஒரேநாளில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் அடுத்தடுத்து அரசியல் நிகழ்வுகள் அரங்கேற, முதல்வர் சுக்வீந்தர் சிங்கும் ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு, “காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் சதியை முறியடித்துள்ளோம். மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதிநீக்க தீர்மானத்தை கொண்டுவந்துள்ளோம். அதன் மீதான விசாரணை செல்கிறது. இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டோம்.
இந்தத் தருணத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ராஜினாமா செய்யவில்லை. காங்கிரஸ் அரசு இமாச்சலில் 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்யும். நாங்கள் போராளிகள். நிச்சயமாக பெரும்பான்மையை நிரூபிப்போம்.
இமாச்சலப் பிரதேச அரசைக் கவிழ்க்க சிஆர்பிஎஃப், ஹரியாணா போலீஸை பயன்படுத்தி முயற்சித்துள்ளனர். எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் பேசிய பேரத்துக்கு எங்கள் எம்எல்ஏக்கள் மயங்கவில்லை. ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக நடந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சி மாறி வாக்களித்த ஒரு எம்எல்ஏவும் மன்னிப்புக் கோரியுள்ளார். தவறான முடிவெடுத்துவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனாலும், ஏற்கெனவே அறிவித்தபடி விசாரணை நடக்கும். மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
சட்டப்பேரவைக்குள் பாஜகவினர் சபாநாயகரின் காவலர்களுடன் சண்டையிட்டனர். இதுபோன்ற நிகழ்வுகளை இந்தப் பேரவை சந்தித்ததில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் அனுமதிக்கத்தக்கது அல்ல. இமாச்சலப் பிரதேசம் கடவுளரின் தேசம். விக்ரமாதித்ய சிங் ராஜினாமாவை அறிவித்துள்ளார். அதனை ஏற்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அவருடன் பேசித் தீர்க்க வேண்டிய சர்ச்சைகள்தான் உள்ளன. அவர் என் சகோதரரைப் போன்றவர்” என்றார் முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு.
நடந்தது என்ன? – இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை இன்று காலை முதல் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை அவைக்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உள்பட 15 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகரின் இந்த உத்தரவை அடுத்து அவர்கள் அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். தன்னைத் தாக்கக் கூடிய சூழலையும் அவர்கள் (பாஜக உறுப்பினர்கள்) ஏற்படுத்தியதாக சபாநாயகர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். | முழுமையாக வாசிக்க > பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்: இமாச்சல் பேரவை பரபரப்பு – நடந்தது என்ன?
இதனிடையே, “காங்கிரஸ் மாநில அரசுகளை கவிழ்ப்பது என்ற ஒற்றை வாக்குறுதியுடன் மோடி அரசு இருக்கிறது. அது நிகழ நாங்கள் விடமாட்டோம்” என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அதன் முழு விவரம்: “இமாச்சலில் மாநில அரசை கவிழ்க்க மோடி அரசு தீவிரம்… நாங்கள் விடமாட்டோம்!” – காங்கிரஸ்