சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை வியாழக்கிழமை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்தம் வெங்கடேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், குற்ற வழக்கை பாரபட்சமான எண்ணத்துடன், முறையான விசாரணை நடத்தாவிட்டால் அது அரசியல் சட்டப் பிரிவுக்கு எதிரானது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் உண்மையை கண்டறியும் நோக்குடன் விசாரணை நடத்தப்படவில்லை.
மேலும், வருமானத்துக்கு உரிய கணக்கை தாக்கல் செய்தும், வருமான வரி கணக்கு உள்ளிட்ட ஆதாரங்களும் தாக்கல் செய்தும், அவற்றை கணக்கில் கொள்ளாமல் புறக்கணித்து, அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டது.மேல் விசாரணையில் கூடுதல் ஆதாரங்களை சேகரித்த பின் வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதலாவதாக தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்ததாக கூறப்படும் சொத்துக்களின் அளவுக்கும், மேல் விசாரணைக்குப் பிந்தைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சொத்துக்களின் அளவுக்கும் வித்தியாசம் உள்ளது. வாடகை வருவாய், விவசாய வருவாய்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. முதல் அறிக்கையில் சேமிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளது.
அந்த இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் செலவு கணக்குகளையும் முறையாக கணக்கிடவில்லை. அதனால் மேல் விசாரணை அறிக்கையை ஏற்று, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து உத்தரவிட்டதால் அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியாது. முதல் இறுதி அறிக்கையில் திருப்தி அளிக்காத காரணத்தால் மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இரு இறுதி அறிக்கைகளில் எதை ஏற்றுக்கொள்வது என்பது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்று வாதிட்டார்.
தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் வாதங்களை தொடங்கிய மூத்த வழக்கறிஞர் ரமேஷ், மேல் விசாரணை குறித்து விளக்கினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதி ல்மனு தாக்கல் செய்த அப்போதைய புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன், பின்னர் மேல்விசாரணைக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தது குறித்து விளக்கம் அளிக்க ஏதுவாக, அவரை வியாழக்கிழமை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.