புதுடெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் 30 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 117 ஆக அதிகரித்துள்ளது. இது பெரும்பான்மைக்கு 4 இடங்கள் குறைவு.
வரும் ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 15 இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், உத்தரப் பிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4, இமாச்சலப் பிரதேசத்தில் 1 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், பல எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத் தேர்தல்: உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 10 இடங்களுக்கு பாஜக சார்பில் 8 வேட்பாளர்கள், சமாஜ்வாதி கட்சி சார்பில் 3 வேட்பாளர்கள் என 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், 7 பாஜக வேட்பாளர்களும், 3 சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெறும் நிலையில் அவற்றின் எம்எல்ஏக்கள் பலம் இருந்தது. எனினும், சமாஜ்வாதி கட்சியின் 7 எம்எல்ஏக்கள், பாரதிய சமாஜ் கட்சியின் ஒரு எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்எல்ஏ ஆகியோர் கட்சியின் கொறடா உத்தரவுக்கு எதிராக கட்சி மாறி வாக்களித்ததை அடுத்து, பாஜக வேட்பாளர்கள் 8 பேர் வெற்றி பெற்றனர். சமாஜ்வாதி கட்சி நிறுத்திய 3 வேட்பாளர்களில் இருவர் வெற்றி பெற்றனர். ஒருவர் தோல்வி அடைந்தார்.
கர்நாடக தேர்தல்: கர்நாடகாவில் மொத்தமுள்ள 4 இடங்களுக்கு 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் 3 வேட்பாளர்களை நிறுத்தியது. பாஜக ஒரு வேட்பாளரையும், அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு வேட்பாளரையும் நிறுத்தியது.
இந்த தேர்தலில், பாஜக எம்எல்ஏ எஸ்.டி. சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். மற்றொரு பாஜக எம்எல்ஏ சிவராம் ஹெப்பார், வாக்களிப்பதை தவிர்த்துள்ளார். இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவரும், பாஜக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் காலியாக இருந்த ஒரு இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளர், எதிர்க்கட்சியான பாஜக சார்பில் ஒரு வேட்பாளர் என இருவர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர், சுயேட்சைகள் 3 பேர் கட்சி மாறி வாக்களித்ததை அடுத்து, பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகளை அடுத்து, பாஜக வேட்பாளர்கள் 30 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 20 பேர் போட்டியின்றி தேர்வான நிலையில், 10 பேர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம், 240 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 97 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற நிலையை அது தக்கவைத்துக்கொண்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 117 ஆக உள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மைக்குத் தேவையான 121 இடங்களுக்கு 4 இடங்கள் குறைவாக உள்ளன.