பெங்களூரு: ”அனைத்து தண்ணீர் டேங்கர் வாகனங்களும் வியாபார சான்றிதழ் பெற வேண்டும். டேங்கர்களுக்கு விரைவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அதிகமாக வசூலித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மழையின்றி ஏற்பட்ட வறட்சியினால், பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், தண்ணீர் டேங்கர் உரிமையாளர்கள் அதிக தொகை வசூலிக்கின்றனர்.
ரூ.2,500 வசூல்
இதற்கு முன்பு, 6,000 லிட்டர் கொண்ட டேங்கிற்கு 1,200 ரூபாய் வரை வசூலித்த நிலையில், தற்போது 2,500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். பகல் கொள்ளை அடிப்பதாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், பெங்., குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், நேற்று கூட்டாக அளித்த பேட்டி:
போக்குவரத்துத் துறையில், பெங்களூரின் 3,500 தண்ணீர் டேங்கர் வாகனங்கள் இருப்பதாக பதிவாகி உள்ளன. ஆனால், மாநகராட்சியிடம் 60 வாகனங்களுக்கு மட்டுமே வியாபார சான்றிதழ் பெற்றுள்ளனர்.
எனவே நகரில் தண்ணீர் பிரச்னை தீர்க்கும் வகையில், மார்ச் 1 முதல், 7ம் தேதிக்குள் அனைத்து டேங்கர் வாகனங்களும் வியாபார சான்றிதழ் பெற வேண்டும்.
பாதிப்பு
மீறினால், தண்ணீர் வினியோகம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படாது. பதிவு செய்யாதவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களின் 30 வார்டுகளில், மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலா ஒரு பொறியாளர் நியமிக்கப்படுவர்.
ஒவ்வொரு டேங்கருக்கு ஆகும் செலவை கணக்கிட்டு, விரைவில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தொகை நிர்ணயம் செய்யப்படும். அதிக கட்டணம் வசூலித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 200 டேங்கர்களை வாங்கி, வார்டு வாரியாக மாநகராட்சியே தண்ணீர் வினியோகம் செய்யும்.
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஏற்கனவே 136 டேங்கர்களில் இலவசமாக காவிரி நீர் வினியோகிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்