Jio Qualcomm 5G Smartphone: ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, ஏர்டெல், வோடபோன் ஐடியோ போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஜியோ நிறுவனம் தொடர்ந்து தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி வகித்து வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் மொபைல் சார்ந்த துறையில் கால்பதிப்பது இது முதல்முறை அன்று, ரிலையன்ஸ் மொபைல்கள் பலரும் நியாபகம் இருக்கும். தற்போதும் 2ஜி, 4ஜி மொபைல்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி மொபைல் தயாரிப்பில் இறங்கப்போகிறது. இந்தியாவில் 5ஜி தற்போது பரவலாகி வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போனையையும் 5ஜி-க்கு அப்டேட் செய்ய விரும்புகின்றனர். ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை தற்போது வரம்பற்ற வகையில் வழங்கி வருகின்றன. உங்களிடம் அடிப்படை டேட்டா பிளான் இருக்கும்பட்சத்தில் 5ஜி இணையத்தை நீங்கள் வரம்பற்ற வகையில் பெறலாம்.
ஜியோ Qualcomm 5ஜி ஸ்மார்ட்போன்
அந்த வகையில், இன்னும் சில நாள்களில் 5ஜி-க்கு கட்டண வசூலிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், அது நாடு முழுவதும் பரவலாக்கப்படுவதும் சாத்தியப்படும். 5ஜி இணைய சேவை என்பது பொழுதுபோக்கில் மட்டுமின்றி மருத்துவம், அவசர உதவி ஆகியவற்றில் பெரும் பங்கை ஆற்றும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சேவையை இன்னும் வழங்கவில்லை.
5ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஜியோ நிறுவனம் உலகின் முன்னணி சிப்செட் (Chipset) தயாரிக்கும் Qualcomm நிறுவனத்துடன் கைக்கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஆரம்ப கட்ட 5ஜி ஸ்மார்ட்போனை தயாரிக்க Qualcomm நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மொபைலுக்காக Qualcomm நிறுவனம் Original equipment makers (OEMs) தயாரிப்புக்கான வேலைகளில் உள்ளன.
பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்
மற்ற மொபைல்களில் நான்கு ஆண்டன்னாவிற்கு பதில் இந்த மொபைலில் இரண்டு ஆண்டன்னாக்களை மட்டுமே பொருத்த இருப்பதாகவும், இதன்மூலம் செலவுகளை குறைக்கலாம் என இரு நிறுவனமும் திட்டமிட்டுருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம், ஜியோ – Qualcomm தயாரிப்பு 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கிடைக்கும் மொபைல்களை விட மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இரு நிறுவனங்களும் 4ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை ஒட்டுமொத்தமாக 5ஜி நெட்வார்க்கிற்கு மாற்ற முனைப்பு காட்டி வருகின்றன. 5ஜி இணைய சேவை 4ஜியை விட அதிவேகத்தில் கிடைக்கும். இதன்மூலம், 2ஜி உள்ளிட்ட ஆரம்ப கட்ட ஃபோன்களை பயன்படுத்துபவர்களும் விலை கம்மியான ரிலையன்ஸ் ஜியோவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனுக்கு மாற்றம் ஆவார்கள். அதன்மூலம், அரசின் செயலியை தங்களின் 5ஜி ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்து, அரசின் நலத்திட்டங்களை எளிதாக சாமானியர்களும் பெறலாம்.
இந்திய சந்தையில் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன் 10 ஆயிரம் ரூபாயில் கிடைக்கிறது. ஆனால், ஜியோ – Qualcomm நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போனை 8 ஆயிரம் ரூபாய்க்கு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. டெக்னோ, மோட்ரோலா, ரியல்மீ, ரெட்மீ மற்றும் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போனைதான் விற்பனை செய்கின்றன. எனவே, முதல்முறையாக இந்திய சந்தையில் வெறும் 8 ஆயிரம் ரூபாய்க்கு 5ஜி ஸ்மார்ட்போனை ஜியோ கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அம்பானி – டிஸ்னி டீல் ஓகே… நீட்டா அம்பானிக்கு மிகப்பெரிய பொறுப்பு