4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29 லீப் தினத்தைக் கொண்டாடும் வகையில் கூகுள் தேடுபொறி டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 28-க்கும் மார்ச் 1ஆம் தேதிக்கும் இடையே பிப்ரவரி 29ல் ஒரு தவளையின் படத்தை இட்டு அது தாவிவந்து அமர்ந்து சிரிப்பது போல் வடிவமைத்துள்ளது. தவளை தாவிச் செல்லும்போது பிப்ரவரி 29 மறைந்துவிடுகிறது. இந்த அமைப்பு ஒரு குளத்தின் பின்னணியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரியின் இந்த போனஸ் தினத்தைக் கொண்டாடவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதான் லீப்: ஒரு வருடத்தில் பூமி சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 விநாடிகள். உதிரியாக இருக்கும் மணி நேரம், நிமிடங்கள், விநாடிகளை நான்கால் பெருக்கினால் வருகிற ஒரு நாள்தான் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் லீப் நாள்.
இன்று பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது கிரிகோரியன் நாட்காட்டி. இந்த நாட்காட்டியில் பிப்ரவரி மாதத்துக்கு நான்காண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் நான்கால் வகுபடும் ஆண்டுகளிலேயே இந்த லீப் ஆண்டு வருகிறது. அதுவே நூற்றாண்டு ஆண்டுகள் என்றால், 400 ஆல் வகுபடும் ஆண்டுகளுக்கு மட்டுமே கூடுதலாக இந்த ஒரு நாள் சேர்க்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு 1600, 2000 ஆண்டுகள் லீப் ஆண்டுகள். ஆனால் 1700, 1800, 1900 ஆண்டுகள் லீப் ஆண்டுகள் கிடையாது.
ஏன் இப்படி? நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) சேர்க்கையில், 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடிகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதை சமன் செய்யவே நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் ஆண்டு கணக்கில் கொள்ளப்படுவதில்லை.