சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜிந்தர் ராணா, ரவி தாக்கூர் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், பாஜக ஆளும் ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள தேவிலால் மைதானத்தில் இருந்து அந்த 6 எம்எல்ஏ.க்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை காலை சிம்லாவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டதாக ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வர் சுக்விந்தர் சிங் மீதுகாங்கிரஸ் எம்எல்ஏ.க்களில் பலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் பாஜகவுடன் நெருக்கம்காட்டி வருகின்றனர். இமாச்சல அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்த பாஜக கோரியுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் ஒரே ஒரு மாநிலங்களவை தொகுதியில் பாஜக தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்த 24 மணி நேரத்தில் பாஜக இந்த கோரிக்கையை விடுத்தது.
இமாச்சல சட்டப் பேரவையில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. எனவே, சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி எதிர்கட்சித் தலைவர் மற்றும்பாஜக எம்எல்ஏ.க்கள் நேற்று காலை ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்து வலியுறுத்தினர்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், “மாநிலங்களவை தேர்தலில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு குறைவாக இருந்த போதிலும் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது, காங்கிரஸ் அரசு ஆட்சியில் நீடிக்கும் உரிமையை இழந்துவிட்டது என்றார்.
பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: இமாச்சல சட்டப் பேரவையில் பட்ஜெட் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. இதில்,காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதானியா, 15 பாஜக எம்எல்ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதில், எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் விபின் சிங் பர்மர் உள்ளிட்டோரும் அடங்குவர்.
பேரவையில் நடத்தை விதிகளை மீறி கண்ணியமற்ற முறையில் செயல்பட்டதற்காக விதி 319-ன் கீழ் பாஜக எம்எல்ஏ.க்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றும் சட்டப்பேரவை தலைவரின் முடிவை எதிர்த்து எதிர்கட்சிகள் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கடும் அமளி நிலவியது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், இமாச்சல முதல்வர் சுக்விந்தர் ராஜிநாமா செய்யப் போவதாக தகவல் வெளியான நிலையில் அது தவறான செய்தி என அவர் மறுப்பு தெரிவித்தார்.மேலும், காங்கிரஸ் அரசு இமாச்சலில் 5 ஆண்டு ஆட்சியை முழுவதுமாக நிறைவு செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கட்சிகள் பலம்: 68 உறுப்பினர்களைக் கொண்டஇமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 40 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்களும் உள்ளனர். 3 பேர் சுயேச்சை எம்எல்ஏக்கள். நேற்று முன்தினம் நடந்த ஒரு மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்ததால் சுயேச்சை ஆதரவுடன் பாஜக மாநிலங்களவை வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.