‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல… அதையும் தாண்டி புனிதமானது…’ என ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில் `குணா’ படத்தின் பாடல் வரிகள் வருகின்ற இடத்தில் ஒட்டுமொத்த திரையரங்குமே ஆர்ப்பரித்த விதம் அதீத சிலிர்ப்பை உண்டாகியது.
32 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு பாடலுக்கு, ஒரு படத்தினை எடுத்து மரியாதை செய்திருக்கிறார் இயக்குநர் சிதம்பரம். அந்த சிலிர்ப்புக்குப் பின்னால் ஒரு நட்பின் கதை ஒளிந்திருக்கிறது. அந்த கதை என்ன, எங்கே நடந்தது என்ற பின்னணியை அலசுவதே இந்தக் கட்டுரையின் தொகுப்பு…
2006-ம் ஆண்டு கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளத்தில் இருக்கும் மஞ்சும்மல் பகுதியிலிருந்து சிஜு, சுபாஷ் ஆகியோர் தங்கள் நண்பர் கூட்டத்தோடு கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலா வந்துள்ளனர். அங்கேயிருக்கிற குணா குகையைச் சுற்றிப் பார்த்தவர்கள், பார்வையாளர்கள் தடைசெய்யப்பட்ட பகுதியைக் கடந்து உள்ளே சென்றுள்ளனர். அங்கே நடந்த சில மணிநேர சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளன.
தற்போது ‘குணா’ குகை என்று அழைக்கப்படுகிற அந்த பகுதியின் முந்தைய பெயர் ‘டெவில்ஸ் கிச்சன்’ (சாத்தானின் சமையலறை). படத்தில் காட்டப்படுவது போலப் பல உயிர்களைப் பலி வாங்கிய அந்தப் பகுதியில் ‘குணா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்க, பின்பு ‘குணா கேவ்’ எனப் பெயர் மாற்றம் அடைந்திருக்கிறது. கொடைக்கானலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மொயர் பாயின்ட் சாலையில் அமைந்துள்ள குணா குகைகள், வழிநெடுக தேவதாரு மரங்களாலும் குன்றுகளாலும் சூழப்பட்டது. 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் குகைகள், பயணிகளைக் கூட்டம் கூட்டமாக ஈர்ப்பதற்கு ‘குணா’ படத்தினை தாண்டி மர்மமாக அதில் நிறைந்திருக்கும் அமானுஷ்யங்களும் மற்றொரு காரணம் எனலாம். அங்கிருக்கும் ஷோலா மரங்களின் முறுக்கப்பட்ட பின்னிப் பிணைந்த வேர்கள் பயணிகளுக்கு மர்ம உணர்வைத் தருகின்றன.
குணா குகையின் வரலாறு 1821-ம் ஆண்டு தொடங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பி.எஸ். வார்டு இந்த இடத்தை அப்போது கண்டுபிடித்திருக்கிறார். கிச்சன் (சமையலறை) என்ற பெயர்க் காரணம் இந்து மதத்தின் புராண கதைகள் படி, பாண்டவர்கள் இந்தக் குகைகளில் தங்கி உணவு சமைத்துள்ளனர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்படுகிறது. ‘டெவில்’ என்கிற வார்த்தை ஏன் சேர்க்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் இன்றும் அறியப்படவில்லை. சுற்றுப்புற மக்கள் அதிலிருக்கும் வௌவால் கூட்டத்தின் உலாவலால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் எனக் கருதுகிறார்கள். ‘குணா’ படத்தின் பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்’ ஹிட்டடித்த பின் இந்தக் குகையை காண இந்திய முழுவதிலுமிருந்து பயணிகள் கூட்டம் வரத்தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆழமான குறுகலான குகைகளை மக்கள் பார்வைக்குக் கண்டு ரசித்தாலும் அவர்களை ஒரு எல்லைக்கு மேல் இரும்பு கம்பிகளும் இரு பலகைகளும் தடுக்கின்றன. ஒரு பலகையில் “இதுவரை இந்தக் குகையிலிருக்கும் குழியில் விழுந்து இறந்தவர்கள் எண்ணிக்கை 13” என்றும், மற்றொன்றில் மதுரையைச் சேர்ந்த வியாபாரியான செண்பக நாடார் இந்த குழியில் விழுந்து இறந்துள்ளதாகத் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. இப்படி இருக்கும் சூழலில் அதில் பிழைத்த ஒரே ஒருவராக 2006-ம் ஆண்டு நடந்த விபத்தில் தப்பித்த அதிர்ஷ்டசாலி சுபாஷ் இருக்கிறார். சுபாஷின் சம்பவத்தைப் பல இயக்குநர்கள் படமாக்க நினைத்தும், மேலே குறிப்பிட்ட புறச்சூழல்கள் அடுத்த கட்டத்துக்குப் படப்பிடிப்பை நகர்த்த முடியாமல் செய்தது. ஆனால் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் கலை இயக்குநர் அஜயன் சாலிசேரி அதை நேர்த்தியாகச் செய்துள்ளார்.
இது குறித்து ஓர் ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “குணா குகை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்குச் செல்ல அனுமதி கொடுக்கத் தயங்கினர். நிறைய வற்புறுத்தலுக்குப் பிறகு, அங்கே செல்ல எங்களுக்கு அனுமதி கிடைத்தது. அதுவும் 80 அடிகளுக்குக் கீழே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. செட் அமைப்பதற்காக நாங்கள் சென்ற இடத்திலிருந்து குகையின் அமைப்பை புகைப்படங்கள் எடுத்தோம். அந்தக் குகையை நிஜமாகவே இருப்பது போல வடிவமைக்க, சரியான அளவீடுகளை எடுத்துக் கொண்டோம். அங்கே செல்வதற்கு முன்பு இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் தேடினோம். ஆனால் எங்கு தேடியும் தெளிவான, சரியான படங்கள் கிடைக்கவில்லை. அதே போல ‘குணா’ படத்தின் காட்சிகளும் குவாலிட்டி குறைவாக இருந்ததால் நேரே அங்குச் சென்று பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் பிறகு ஹைதராபாத் பகுதியில் அண்டர் கிரவுண்டில் 17 அடி ஆழத்தில் செட் அமைத்து படப்பிடிப்பினை நடத்தினோம்” என்று கூறியிருக்கிறார்.
ஆம், `மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் பார்த்தவர்களுக்கு இது ஆச்சர்யத்தைக் கொடுக்கலாம். படத்தில் காட்டப்பட்ட ‘குணா குகை’ முழுவதுமாக செட்தானாம்!
சொல்பவர்கள் எல்லாம் அதிலிருக்கும் ஆபத்தின் உச்சத்தைச் சொல்ல, இதுவரை அந்தக் குழியில் விழுந்து யாரும் உயிர் பிழைக்காத நிலையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுபாஷ் மட்டும் உயிர் பிழைத்தது எப்படி என்கிற கேள்விக்கான விடையை 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சித் ஜனார்த்தனன் எடுத்த டாக்குமென்ட்ரி விடையாகச் சொல்கிறது.
அந்த ஆவணப்படத்தின் தொடக்கமே சுபாஷ் எழுதிக் கொண்டிருப்பதாகத் தொடங்குகிறது. அப்போது சுபாஷ் நல்ல திரைக்கதையாளராக வர வேண்டுமென்கிற தனது லட்சியத்தைப் பகிர்கிறார். இன்று தன் வாழ்வே வெற்றிகரமான திரைக்கதையாக மாற்றப்படும் என்கிற எதிர்பார்ப்பில்லாத வார்த்தைகள் அவை. படத்தில் காட்டுவது போல குவாலிஸ் வண்டியில்தான் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். சுமார் மாலை 5 மணியளவில் சுபாஷ் அந்தக் குகைக்குள் மாட்டிக்கொள்கிறார். ஆனால் படத்தில் காட்டுவது போல 120 அடி அடியைத் தாண்டி விழவில்லை, 60 அடிகளிலேயே சிக்கிக்கொள்கிறார்.
அதனை விவரிக்கும் சுபாஷ், “அது பிரீசர் பெட்டியில் மாட்டிக்கொண்ட உணர்வைத் தந்தது. உறையவைக்கும் குளிரும், வௌவால்களின் இரைச்சலும் சாவை என் கண்முன் கொண்டுவந்தன. எனக்கான ஓர் ஆறுதல் மேலே இருந்து எனது நண்பர்களின் குரல்கள் கேட்டதுதான். ‘அங்கே விழுந்தவர்கள் யாரும் உயிர்பிழைக்கவில்லை’ என்று சொல்வது, அவர்கள் எல்லோரும் அந்தக் குழியில் விழுந்து உடனே இறந்து விட்டார்கள் என்ற எண்ணத்தை பொதுவாக தருகிறது. நிஜத்தில் என்னைப்போல ஏதோ ஒரு குழியில் மாட்டிக்கொண்டு உணவும் தண்ணீரும் இல்லாமல் நரக வேதனை அனுபவித்தே இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது என்னுடைய எண்ணம். ஏனெனில் அது ஒரு நேரான குழி கிடையாது. அம்யூஸ்மெண்ட் பார்க்கில் இருக்கும் நீர் சறுக்குக் குழாய்களில் செல்லும் வளைவுகளைப் போல இது இருக்கிறது. எனவே உள்ளே விழுபவர் இடையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பே அதிகமாக இருக்கிறது” என்கிறார்.
இதே நிகழ்வில் அவரைக் காப்பாற்ற குழிக்குள் இறங்கிய சிஜு, “சுபாஷ் விழுந்த 10 முதல் 15 நிமிடங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நாங்கள் எல்லாம் உறைந்து நின்றுவிட்டோம். போதாத குறையாக மழையும் வேறுபெய்ய ஆரம்பித்துவிட்டது. எங்களுக்கு எந்த குழி எவ்வளவு ஆழம் என்று தெரியாது. ஒருவேளை ஆழம் குறைவாக இருந்து சுபாஷ் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுவானோ என்ற பயமும் இருந்தது. அதே போல மண்டையை உடைக்கும் அளவுக்கான கல்லும் குழிக்குள் விழுகிற அபாயம் இருந்ததால் நாங்கள் அனைவரும் குழியினை சுற்றி ஒரு வளையம் போல அமைத்துப் படுத்துக்கொண்டோம். மழை நின்ற பின்னர் ஃபயர் ஆபிசர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
முதலில் அவர்கள் வந்தவுடன் கயிற்றை மட்டுமே குழிக்குள் இட்டுத் தேடிக்கொண்டிருந்தனர். ஆனால் சுபாஷ் குழிக்குள் இருந்து கத்திக்கொண்டிருந்தான். எனவே நானே ஃபயர் ஆபிசரிடம் சென்று குழிக்குள் இறங்குவதாகக் கூறிவிட்டேன். முதலில் தயங்கியவர்கள் நான் என் முடிவில் பிடிவாதமாக இருப்பதைக் கண்டு உள்ளே இறக்கினர். நாங்கள் கொண்டு வந்த டார்ச்லைட்டை மாட்டிக்கொண்டு அவர்களின் கயிற்றின் உதவியோடு உள்ளே இறங்கினேன்” என்றார்.
“குட்டன் சத்தம் எனக்குக் கேட்டது. நானும் கத்தினேன். ஆனால் அவன் எங்கு இருக்கிறான் என்பது தெரியவில்லை. ஒருவழியாக அவன் என்னைக் கண்டடைந்தான். பின்னர் கயிற்றினைக் கட்டி என்னைத் தூக்கினான். என் உடம்பிலிருக்கும் கடைசி சக்தியைக் கொண்டு நானும் அவனுக்கு ஒத்துழைப்பு தந்தேன். இருவரும் மேலே சென்று கொண்டிருக்கும் ஒரு இடத்தில் கயிறு மாட்டிக்கொண்டது. இருவரும் முழு பலத்தினைக் கொண்டு அதைத் தாண்டினோம். மேலே வந்து உயிரோடு வெளிச்சத்தினை பார்த்தது, இன்றும் எனக்கு மிராக்கிள் போல இருக்கிறது” என்கிறார் சுபாஷ்.
டாக்குமென்டரி முடியும் தறுவாயில் கொடைக்கானலில் இருக்கும் குணா குகைக்குச் செல்லும் ஆவணப்படக்குழு. இந்த முழு நிகழ்வுக்குச் சாட்சியாக இருக்கும் அங்கிருக்கும் வியாபாரியிடம் கதையைக் கேட்க அவர் இந்தக் கதையை எல்லாம் விளக்கமாகச் சொல்லிவிட்டு, “அங்க அதுக்கு முன்னாடி விழுந்த 13 பேரோட ஒரு எலும்பைக் கூட இதுவரையும் எடுக்க முடில. ஆனா ஒருத்தர உயிரோட எடுக்க முடிஞ்சுதுன்னா அதுக்கு தெய்வம் தாங்க காரணம். அந்த தெய்வம் வேற யாருமில்ல அவரோட பிரண்டுங்கதான்” என நெகிழ்கிறார்.
உண்மையில் யோசித்தால், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் `மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல’ என்ற பாடல் வந்ததும் நமக்கு வந்த சிலிர்ப்பின் காரணம், வாலியின் வரிகளா, கமல்ஹாசனின் நடிப்பா, சந்தானபாரதியின் இயக்கமா, அந்த இடத்தில் அந்தப் பாடலை வைக்க வேண்டும் என்ற `மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநரின் சிந்தனையா என்கிற கேள்விக்குப் பின்னால் “எங்கள் நட்பு அதையும் தாண்டி புனிதமானது” என்று சுபாஷின் நண்பர் கூட்டம் குணா குகையில் கத்தியது மெல்ல எதிரொலிக்கிறது!