மாலே: மாலத் தீவுகளில் உள்ள மூன்று இந்திய விமானப் படை தளங்களை பராமரிக்கும் பணிக்காக, இந்திய சிவிலியன் குழு அங்கு சென்றடைந்தது.
தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் அதிபராக, சீன ஆதரவாளர் முகமது முய்சு, கடந்தாண்டு நவம்பரில் பதவியேற்றார்.
ஆதரவு
இதைத் தொடர்ந்து, மாலத்தீவுகள் மற்றும் இந்தியா இடையேயான உறவில் உரசல் ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா குறித்தும் அந்த நாட்டின் அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், தன் சீன ஆதரவு கொள்கையை அதிபர் முய்சு வெளிப்படையாக தெரிவித்து வந்தார். மேலும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் பகிரங்கமாக தெரிவித்து வந்தார்.
தீவு நாடான மாலத் தீவுகள், இந்தியப் பெருங்கடலில் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் மூன்று விமானப் படை தளங்களை இந்தியா பராமரித்து வருகிறது.
குறிப்பாக, அந்த நாட்டில் மருத்துவ சேவை உள்ளிட்டவற்றுக்கு உதவுவதற்காக, அங்கு நம் விமானப் படை மற்றும் ராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவுகளில் உள்ள, 88 இந்திய ராணுவ வீரர்களை, மார்ச் 10ல் இருந்து வெளியேற்ற வேண்டும். மே, 10ம் தேதிக்குள் அதை முடிக்க வேண்டும் என, முய்சு உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக இம்மாத துவக்கத்தில், புதுடில்லியில் பேச்சு நடந்தது. இதைத் தொடர்ந்து, மாலத்தீவுகளில் உள்ள ராணுவ வீரர்களுக்கு பதிலாக, விமானங்களை இயக்குவது, பராமரிப்பது போன்றவற்றில், சிவிலியன்களை நிலைநிறுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.
வீரர்கள் திரும்புவர்
இதன்படி, முதல் சிவிலியன் குழு, மாலத்தீவுகளை நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து, படிப்படியாக ராணுவ வீரர்கள் திரும்புவர் என்றும், மற்ற சிவிலியன் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என, கூறப்படுகிறது.
சீன கப்பல் புறப்பட்டது!
சீனாவின் ‘ஜியாங்க் யாங்க் ஹாங்க் — 3’ என்ற பிரமாண்ட ஆராய்ச்சி கப்பல், மாலத் தீவுகளில் கடந்த ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆராய்ச்சிக்காக இந்த கப்பல் வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இந்தியாவை உளவு பார்ப்பதற்காக அந்தக் கப்பல் அங்கு சென்றதாக, மத்திய அரசு புகார் கூறி வந்தது.இந்நிலையில், அந்தக் கப்பல், மாலத்தீவுகளில் இருந்து நேற்று புறப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்