தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழ்களில் அளித்த விளம்பரத்தில் சீன நாட்டு கொடியுடன் விளம்பரப்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, துறைமுக நிர்வாக அலுவலகத்தில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழாவிற்காக கடந்த 28-ம் தேதி தூத்துக்குடி வந்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டம் அடிக்கல் நாட்டு விழாவுக்காக முன்னணி நாளிதழ்களில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்சார்பில் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், பிரதமர் நரேந்திர மோடி , முதல்வர் ஸ்டாலினின் படங்கள் பெரியதாகவும் கனிமொழி, உதயநிதியின் படங்கள் சிறியதாகவும் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் சீன நாட்டின் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம்பெற்றுள்ளது.
அந்த படங்களின் பின்புலத்தில் ராக்கெட் ஏவுவது போல் ஒரு படம் இருக்கிறது. அதில் சிவப்பு நிறத்தில் ஸ்டார் குறியீடுகளுடன் ராக்கெட் இடம்பெற்றுள்ளது. இது சீன நாட்டு கொடியை போன்றே இருப்பதால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்தியா ராக்கெட் துறையில் அசுர வளர்ச்சி பெற்று வரும் நிலையில் நம் நாட்டு விண்வெளி வீரர்களை அவமதிப்பது போல் சீன நாட்டின் ராக்கெட் போட்டிருப்பதாலும், இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட்களே நம் நாடு விண்ணில் ஏவும் நிலையில், சீன நாட்டு ராக்கெட்களின் புகைப்படத்தை வைத்து விளம்பரம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
“இது நாட்டு இறையாண்மைக்கு எதிரானது” என்றெல்லாம் பா.ஜ.க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், தூத்துக்குடி மீன்பிடித்துறைமுக வளாகத்தில், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை மற்றும் தூத்துக்குடி மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையம் ஆகியவை இணைந்து மீன்பிடிப் படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மீனவர்களுக்கான ஒருவார கால இலவச பயிற்சி தொடக்க விழா இன்று நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ‘விளம்பரம் சர்ச்சை’ குறித்த கேள்வியை முன் வைத்தோம். அதற்கு பதிலளித்த அவர், “எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில் சீன அடையாள கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது. அது, தெரியாமல் நடந்த தவறு. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நான் இந்தியன்தான்.
எங்களுக்கு இந்தியாவின் மீது அதிகப் பற்று இருக்கிறது” என்ற அவர், “குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்தது கலைஞர் கருணாநிதியும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும்தான். அதன்பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலினும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும் அழுத்தமாக குரல் கொடுத்தனர். இதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு அரசு விழாவில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தையும் பயனையும், புதிய திட்டங்களையும், தொடங்க இருக்கும் திட்டங்களையும் பற்றி பேசவார்களே தவிர அரசியல் பிரசாரம் பேச மாட்டார்கள். அவர் தான் பிரதமர் என்பதை மறந்து, நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் அப்படி அரசியல் பேசியது நமது நாட்டின் பிரதமர் என்பது என நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது அடிப்படைகூட தெரியாமல் இருக்கிறார் பிரதமர்” என, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமரைச் சாடினார்.
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, “இந்த விளம்பரத்தை செய்த நபர் எங்கிருந்து இந்தப் படத்தைக் கண்டுபிடித்தார் என்று எனக்குத் தெரியவில்லை. சீனாவை இந்தியா எதிரி நாடாக அறிவிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். சீன பிரதமரை நம் பிரதமர் இந்தியா அழைத்ததையும், அவர்கள் மகாபலிபுரம் சென்றதையும் பார்த்திருக்கிறேன். உண்மையை ஏற்க விரும்பாத காரணத்தால் பிரச்னையை திசைதிருப்ப காரணங்களை தேடுகிறீர்கள்” எனக் கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY