பில் கேட்சா இது…!! சாலையோர கடையில் டீ ஆர்டர் செய்த வீடியோ வைரல்

புதுடெல்லி,

பிரபல சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர் பில் கேட்ஸ். உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றவரான கேட்ஸ், இந்தியாவின் நாக்பூர் நகரில் சாலையோர டீ கடை ஒன்றுக்கு சென்றார்.

டாலி என்பவர் தள்ளுவண்டியில் வைத்து சுவையான டீயை விற்பனை செய்து வருகிறார். அதனுடன், பிஸ்கெட், இனிப்பு உள்ளிட்டவற்றையும் விற்கிறார். டீ போடும் ஸ்டைலுக்காக பிரபல நபராக அறியப்படுபவர் டோலி. ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் போன்ற தோற்றம் கொண்டவர் என ஒப்பிட்டு பேசப்படுபவர்.

அந்த கடைக்கு செல்லும் பில் கேட்ஸ், ஒரு டீ கொடுங்கள் என ஆங்கிலத்தில் கேட்கிறார். உடனே, டாலி அவருக்கே உரிய பாணியில் அடுப்பை பற்ற வைத்து, பாலை ஊற்றி, தேவையான பொருட்களை சேர்த்து அந்த டீயை தயார் செய்கிறார்.

அதனை பில் கேட்ஸ் வாங்கி கையில் வைத்திருக்கிறார். இதுபற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். 12 லட்சத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒருவர், டாலியை பூமியிலேயே அதிர்ஷ்டம் வாய்ந்தவர் என்றும் மற்றொருவர், ஏன் அந்த டீயை பில் கேட்ஸ் குடிக்கவில்லை? என்றும் கேட்டு பதிவுகளை பகிர்ந்து உள்ளனர். இதேபோன்று, யுஸ்வேந்திர சாஹல் ஏன் பில் கேட்சுக்கு டீயை குடிக்க கொடுக்கிறார்? என வேறொருவர் கேட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.