“தனித்துப் போட்டியிட வாய்ப்பில்லை, மீண்டும் பிரதமராக மோடிதான் வர வேண்டும் எனும் நிலைப்பாட்டில் இருக்கிறோம்.” என்று தெரிவித்தார் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெறுகின்ற ரயில்வே திட்டங்கள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில், மதுரையில் எம்.பி-க்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ள வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சென்னை – போடி ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும், பொது மக்கள் நலன் கருதி மதுரை – போடி பாசஞ்சர் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
திண்டுக்கல்-லோயர் கேம்ப் வரை 123 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும், விரைவு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் கோரிக்கை வைத்துள்ளேன். போடி ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன்” என்றவர்,
தொடர்ந்து பேசும்போது, “ஓரிரு நாள்களில் பா.ஜ.க- ஓ.பி.எஸ் – டி.டி.வி கூட்டணி முடிவு எட்டப்படும், பிரதமர் மீண்டும் தமிழகம் வரவிருக்கிறார், அதற்குள்ளாக கூட்டணி முடிவாக வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி-யை தாமரை சின்னத்தில் போட்டியிட பா.ஜ.க வலியுறுத்துவதாகச் சொல்வது வதந்தியாகும், தனித்துப் போட்டியிட வாய்ப்பில்லை.
மீண்டும் பிரதமராக மோடிதான் வர வேண்டும் எனும் நிலைப்பாட்டில் இருக்கிறோம், பிரதமரை ஆதரிக்கிறோம். பா.ஜ.க-வுடன் கூட்டணியில் பங்கேற்கிறோம், தென் மாவட்டங்களில் எந்த ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கிறேன்” என்றார்.