“மோடி நினைத்திருந்தால் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கலாம்” என்று, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெறுகின்ற ரயில்வே திட்டங்கள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில், எம்.பி-க்களுடான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது.
அதில் கலந்துகொண்டுவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், “எம்.பி-க்களுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளேன். பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் – சென்னைக்கு நாள்தோறும் கூடுதலாக ஒரு ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஒதுக்கிய நிதி குறித்த பட்டியலை புள்ளி விவரத்துடன் வெளியிட வேண்டும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் பொத்தாம் பொதுவாக பேசியுள்ளார்.
இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஏதும் பேசவில்லை, தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் அரசியல் பேசி வருகிறார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து 10 ஆண்டுகளாக ஞாபகம் வராத பிரதமருக்கு, இப்போதுதான் ஞாபகம் வந்துள்ளது. தற்போது இருவரையும் பாராட்டி பேசி உள்ளார், எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றிய நிலையில் இந்திரா காந்தி ஏற்பாட்டில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டார், அதனால் எம்.ஜி.ஆர் கூடுதலாக மூன்று வருடம் உயிரோடு இருந்தார்.
உடல் நலம் குன்றிய ஜெயலலிதாவை மோடி நினைத்திருந்தால் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கலாம். பிரதமர் மோடி எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதை யதார்த்தமாக எடுத்துக்கொள்ள முடியாது. பா.ஜ.க-வின் கூட்டணியில் அ.தி.மு.க இல்லாத காரணத்தால் வாக்குகளுக்காக எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார்” என்றார்.