புதுடில்லி : உத்தரகண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த, 41 தொழிலாளர்களை மீட்ட ‘எலி வளை’ சுரங்க நிபுணர் வக்கீல் ஹசனின் டில்லியில் உள்ள வீடு, ஆக்கிரமிப்பு காரணமாக நேற்று இடிக்கப்பட்டது.
சிறிய சுரங்கம்
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா சுரங்கப் பாதை அமைக்கும் பணியின் போது, கடந்த நவம்பரில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
பல நாட்களாக சுரங்கத்தில் தவித்த அவர்களை மீட்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இறுதியில், டில்லியில் இருந்து 24 எலி வளை நிபுணர்கள் என அழைக்கப்படும் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, அவர்கள் சிறிய சுரங்கம் தோண்டி 41 தொழிலாளர்களையும் உயிருடன் மீட்டனர்.
இந்நிலையில், டில்லி கஜுரி காஸ் பகுதியில் இருந்த எலி வளைநிபுணர்களில் ஒருவரான வக்கீல் ஹசனின் வீடு, நேற்று முன்தினம் டில்லி மேம்பாட்டு ஆணையத்தால் இடிக்கப்பட்டது.
அப்பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை, முன்கூட்டியே நோட்டீஸ் தந்து அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெகுமதி
இது குறித்து ஹசன்கூறியதாவது:
உத்தரகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களின் உயிரை காப்பாற்றியதற்காக எனக்கு கிடைத்த வெகுமதி இது. எங்களின் வீட்டை இடித்தது மட்டு மின்றி, என்னையும், குழந்தைகளையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
எங்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கவில்லை. தற்போது இந்த விஷயம்பெரிதானதும், எங்களுக்கு கோவிந்த்புரி பகுதியில் வீடு வழங்குவதாக டில்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர். அவை வெறும் வாய் வார்த்தையாக கூறப்படுவதால், அதை நாங்கள் ஏற்க முடியாது.
இவ்வாறு அவர்கூறினார்.
இந்த சம்பவத்தை அறிந்த டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனா, ”ஹசனின் வீடு இடிக்கப்பட்டதற்கு இழப்பீடுதருவதுடன், புதிதாக வீடும் கட்டித் தரப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்