புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.75,021 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் ‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சாரம்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. காரிப் பருவ விவசாயத்துக்கு ரூ.24,420 கோடி மதிப்பிலான உரமானியத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ‘பிரதமரின் சூரிய வீடு: இலவசமின்சாரம்’ திட்டத்தை, பிரதமர் மோடி பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ், வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்த முன்வரும் 1 கோடி வீடுகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.78,000 வரை மானியம் அளிக்கப்படும். 1 கிலோவாட் திறன்உள்ள சோலார் பேனல் பொருத்துவோருக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியம் கிடைக்கும்.
2 கிலோவாட் திறன் உள்ள சோலார் பேனல்களுக்கு, மொத்த செலவில் 60 சதவீதம் வரை மத்தியஅரசின் நிதியுதவி கிடைக்கும். 3 கிலோவாட் திறனில் பேனல் பொருத்துவோருக்கு 40 சதவீதம்கூடுதலாக நிதியுதவி கிடைக்கும்.
இத்திட்டத்தில் பயன்பெற, வீட்டு உரிமையாளர்கள் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, தங்களுக்கு ஏற்ற சோலார் பேனல் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கலாம். சோலார் பேனல் பொருத்தும் வீடுகள் 7 சதவீத வட்டியில் கடன்பெற முடியும்.
இத்திட்டம் மூலம் மக்கள் தங்கள் மின் கட்டணத்தை சேமிக்க முடியும். தங்கள் தேவைக்கு போக கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்விநியோக நிறுவனங்களுக்கு வழங்கி, கூடுதல் வருவாய் பெறவும் முடியும்.3 கிலோவாட் சோலார் பேனல் பொருத்தினால், ஒரு வீட்டில் சராசரியாக மாதம் 300 யூனிட்களுக்கு மேல் மின்சாரத்தை பெறமுடியும். இதன்மூலம் உற்பத்தி, போக்குவரத்து, விநியோகம், விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 17 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான காரிப்பருவ விவசாயத்துக்காக உரத்துறை நிர்ணயம் செய்த மானியத்துக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தவிர, செமிகண்டக்டர் திட்டத்தின்கீழ், நாட்டில் 3 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்கவும், பெரிலியம், காட்மியம், கோபால்ட் உள்ளிட்ட 12 முக்கிய கனிமங்களுக்கான ராயல்டி விகிதத்துக்கு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம்1957-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கும் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
ரூ.24,420 கோடி உர மானியம்: அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு, உரத் துறை மானியம் குறித்துசெய்தியாளர்களிடம் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:
காரிப் பருவ விவசாயத்துக்கு ரூ.24,420 கோடி மதிப்பிலான உரமானியத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒரு கிலோவுக்கு நைட்ரஜன் உரத்துக்கு ரூ.47.02, பாஸ்பரஸ் உரத்துக்கு ரூ.28.72, பொட்டாசியம் உரத்துக்கு ரூ.2.38, கந்தக உரத்துக்கு ரூ.1.89 என மானியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாஸ்பரஸ் உரத்துக்கான மானியம் கடந்த 2023 ராபி பருவத்தில் ரூ.20.82 ஆக இருந்தது. அது 2024 காரிப் பருவத்துக்கு ரூ.28.72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நைட்ரஜன், பொட்டாசியம், கந்தக உரங்களுக்கான மானியத்தில் மாற்றம் இல்லை. இந்த மானியத்துடன், 50 கிலோ எடையுள்ள டிஏபி உரமூட்டை தற்போதைய விலையானரூ.1,350-க்கு தொடர்ந்து கிடைக்கும். எம்ஓபி மூட்டை ரூ.1,670, என்பிகே உர மூட்டை ரூ.1,470-க்கு தொடர்ந்து கிடைக்கும்.
டிஏபி இறக்குமதியை குறைப்பதற்காக, என்பிஎஸ் திட்டத்தின்கீழ் 3 புதிய கிரேடு உரங்களை சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உரங்களுக்கான மானியம் உர கம்பெனிகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மலிவு விலையில் கிடைக்கும். விவசாயிகளுக்கு 25 கிரேடு பி அண்ட் கே உரங்கள் மானிய விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிதி ஆண்டில் ஜனவரி வரை உர மானியமாக மத்திய அரசு ரூ.1.71 லட்சம் கோடி வழங்கியுள்ளது. 2024-25 நிதி ஆண்டுக்கு உர மானியமாக மத்திய அரசு ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.