“தமிழகம் போதை பொருள்கள் நிறைந்த மாநிலமாக மாறுவதற்கு திமுக அரசே காரணம்” – சாடும் எடப்பாடி பழனிசாமி

கர்நாடகா அரசு மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்கிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமியை கார்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்து வந்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாடத்தில் எடப்பாடி பழனிசாமி

இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சூரியன் முகத்துக்கு நேராக அடிக்கும். அதனால் கொஞ்சம் பொறுமையாகவே மேடைக்கு போவோம் என கூறி நிர்வாகிகள் என்னை மெதுவாக அழைத்து வந்தனர். அப்படியிருந்தும் நான் சீக்கிரமாக வந்து விட்டேன். தமிழகத்தில் அதிக பொறுப்புள்ள கட்சி அ.தி.மு.க., தான். டெல்டா மாவட்டத்தை காத்தது அ.தி.மு.க., அரசு. தி.மு.க., ஆட்சியில், இன்றைய முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தான் மீத்தேன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. மத்திய அரசு டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியாருக்கு அனுமதி கொடுத்தனர். இதனால் விவசாய நிலங்கள் பறிபோகி விடுமோ என பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விவசாயகளின் அச்சத்தினை போக்கு விதமாக, நானும் விவசாயி என்பதால் அ.தி.மு.க., அரசு டெல்டாவை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலம் என்ற நிலையான ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இன்றைக்கு யாரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க முடியாது. அதற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதை சாதித்தது அ.தி.மு.க அரசு. 50 ஆண்டுகள் நடைபெறும் காவிரி பிரச்னைக்காக ஜெயலிலதா முதல்வராக இருந்த போது சட்டப்போராட்டம் நடத்தினார். அவரது மறைவுக்கு பிறகும் சட்ட போராட்டம் நடத்தி, ஒரு நிலையான தீர்ப்பை பெற்றோம்.

தஞ்சாவூரில் காவிரி பிர்ச்னைக்காக அ.தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டம்

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும், நமது கூட்டணியில் இருந்த மத்திய அரசு, தீர்ப்பினை நிறைவேற்ற காலம் தாமதம் செய்தனர். பிறகு அ.தி.மு.க., எம்.பிக்கள் 37 பேர், லோக்சபாவில் குரல் கொடுத்ததால் 22 நாட்கள் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தான் மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை அமைத்தது. இது அ.தி.மு.கவுக்கும், டெல்டா விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி.

ஆனால், இன்றைக்கு கர்நாடக அரசு ஆண்டுதோறும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி வழங்க வேண்டிய தண்ணீரை தரமறுத்து வருகிறது. அதை கேட்டு பெற திராணி இல்லாத அரசாக இன்றைக்கு தி.மு.க., உள்ளது. கர்நாடகவில் காங்கிரஸ், பா.ஜ.க யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை வஞ்சிக்கின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி நமது பங்கு நீரை திறக்க மறுக்கிறார்கள். அதை தி.மு.க அரசு தட்டிக்கேட்கவில்லை. திறமையற்ற, பொம்மை முதல்வர் ஆட்சியில் உள்ளார். ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் போராடி நமக்கு தேவையான நீரை பெற்று தந்தது.

அ.தி.மு.கவினர்

கடந்த 1-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள், ஐந்து பேர் வாக்கெடுப்பில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக இருந்துள்ளார்கள் மேகேதாட்டூவில் அணை கட்ட கொண்டு வரப்பட்ட தீர்மான பொருள் தான் அது. மேக்கேதாட்டூவில் அணை கட்ட திட்ட அறிக்கையுடன் அனுமதி கேட்டு , கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. மத்திய நீர்வளத்துறை ஆணையம், காவிரி மேலாண்மை வாரியத்திடம் விளக்கம் கேட்டது. உடனே அ.தி.மு.க அரசு இதற்கு எதிராக, மத்திய நீர்வளத்துறை இயக்குநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டது. உடனே இதை கைவிட்டனர். பிறகு அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் வரை , காவிரி மேலாண்மை வாரியத்தில் மேக்கேதாட்டூ குறித்து பேசவில்லை.

ஆனால், அ.தி.முக அரசு பெற்று தந்த தீர்ப்பை காப்பாற்ற முடியாத திறனற்ற முதல்வராக ஸ்டாலின் உள்ளார். மேக்கேதாட்டூ அணை கட்டுவது குறித்த தீர்மானம் வந்த போது, தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். அது இல்லாமல் வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு தோல்வியுற்று பிரச்னையை உருவாக்கி விட்டனர். இதில் மத்திய நீர்வளத்துறை ஆணையம் என்ன செய்ய போகிறது என தெரியவில்லை. அப்படி காவிரி மேலாண்மை வாரியத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதிக்கொடுத்து விட்டால், டெல்டா மாவட்டம் பாலைவனமாகி விடும்.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம். அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து கடன் பெற்றுக்கொள்ள முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் 48 லட்சம் பேர் அடகு வைத்த நிலையில், 13 லட்சம் பேருக்கு தான் தள்ளுபடி செய்தனர். மீதமுள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். இதனால் பலரின் நகை முழ்கியது. இப்படியாக 35 லட்சம் பேருக்கு நாமம் போட்டார்கள்.

கஜா புயல் நேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை. ஆனால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது உதவி செய்ய வேண்டும் பல்வேறு நிவாரணங்களை வழங்கியது. பயிர் காப்பீடு திட்டம் மூலம் வறட்சி, வெள்ள நிவாரணம் பெற்று தந்தோம். டெல்டாக்காரன் என வீரவசனம் பேசி, முதல்வர் ஸ்டாலின் மேட்டூரில் தண்ணீரை திறந்தால், 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் தண்ணீர் முழுமையாக வராமல் 3.5 லட்சம் ஏக்கர் பயிர்காய்ந்து போனது. இதனால் விவசாயிகள் பெரும் துன்பம் அடைந்தனர். பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருந்தால், ஒரு ஹெக்டருக்கு ரூ.84,000 நிவாரணம் கிடைத்திருக்கும். இப்படியாக எதுவும் தெரியாமல் ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் பூஜ்ஜியம் முதல்வரால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளை ஏமாற்றுகிறது தி.மு.க அரசு.

தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

தி.மு.க அரசின் முதல்வர் போல ஏ.சி.,யில் இருப்பவன் நான் அல்ல., விவசாயிகளுக்கு எப்போது துன்பங்கள் வந்தாலும் ஓடோடி வந்து அ.தி.மு.க., நிற்கும். பொதுப்பணித்துறை கீழ் உள்ள 6 ஆயிரம் ஏரிகள் துார்வாரமல் உள்ளது. பல்வேறு கதவணை கட்ட அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க., அரசு தடுத்து வைத்துள்ளது. இந்த மூன்று ஆண்டு ஆட்சியில், விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. வேதனை தான் மிஞ்சியுள்ளது. காவிரி – கோதவரி இணைப்பு திட்டத்தை தி.மு.க., அரசு அரசியல் காழ்புணர்ச்சியால் கிடப்பில் போட்டுள்ளது.

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் கேட்டால், விவசாயி எப்படி பிழைக்க முடியும். இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ. 2,500 ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. வருமானம் வருவதை பார்த்து வருகிறார் முதல்வர்.

தமிழகத்தில் தான் அதிகளவில் கஞ்சா விற்கிறது. தி.மு.கவை சேர்ந்த மாநில பொறுப்பாளர் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதை பொருளை வெளிநாட்டிற்கு கடத்துகிறார் என்றால், தமிழகம் போதை பொருள்கள் நிறைந்த மாநிலமாக மாற இந்த விடியா தி.மு.க அரசு காரணமாக உள்ளது. இதை மத்திய அரசு உரிய கவனம் செலுத்தி, இதில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தர வேண்டும். தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு ஒரு பயனும் கிடைக்கபோவது இல்லை. வரும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று விட்டால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.