தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தி.மு.கவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். பிரதமர் மோடி இதுபோன்று பேசியது கிடையாது.
அதற்குக்கு ஏற்ப அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சீனா ராக்கெட் படம் போட்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளார். குலசேகரப்பட்டினத்தில் 2,233 ஏக்கர் அளவில் இஸ்ரோவின் ராக்கெட் தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு அ.தி.மு.கதான் முழுக்காரணம். தேவையான நிலங்களை கையகப்படுத்தி கொடுத்த ஆட்சி அ.தி.மு.க தான்.இந்த திட்டத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. `ராக்கெட் ஏவுதள திட்டம் கருணாநிதியின் கனவுத் திட்டம். அந்த கனவு, நனவாக்க விட்டதாக’ கனிமொழி எம்.பி கூறுகிறார். அவரின் கனவு கனவாக மட்டும்தான் இருக்கும். இதற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கூடிய மக்கள் கூட்டம் பிரதமர் மோடியை பார்ப்பதற்காக வந்த கூட்டம்தான். ஆனால் அது தேர்தலில் ஓட்டாக மாறாது. தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் அதிகபட்சம் 5 சதவீத வாக்குகள்தான் கிடைக்கும். திராவிட கட்சிகள் இல்லாமல் தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர் என்றால் அது கனிமொழிதான். கீதா ஜீவன் , அனிதா ராதாகிருஷ்ணன் இருவருமே ’டம்மி’ அமைச்சர்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களில் டம்மி அமைச்சர்கள் இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில்தான்.
தேர்தல் களத்தில் அ.தி.மு.கவுக்கு சாதகமான அம்சம் உள்ளது. மக்கள் என்றைக்கும் விலை போக மாட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் மேல் இருந்த வெறுப்பில் தி.மு.க வெற்றி பெற்றது. தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து விட்டதாகக் கூறுகிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை. அதன் வளர்ச்சியை வரும் தேர்தலில் பார்ப்போம். அ.தி.மு.கவின் வளர்ச்சி இன்று இமயமாக உயர்ந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிமிடம் வரை அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க தவம் கிடைக்கிறது. எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகிறார்கள். அ.தி.மு.க பலமாக இருப்பதால்தான் பா.ஜ.க தேடுகிறது. தி.மு.க கூட்டணியில் இரண்டு கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இந்த முறை அ.தி.மு.கதான் களமிறங்குகிறது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க வேட்பாளரை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தேர்வு செய்துவிட்டார். அத்தனை கட்சிகளும் கூட்டணிக்காக இன்னும் ஒரு வார காலத்திற்குள் அ.தி.மு.கவைத் தேடி வரும் நிலை இருக்கும். ஒரு அரசியல் மாற்றம் திருப்பம் ஏற்படும். வெற்றி அ.தி.மு.க-வுக்குதான்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY