மருத்துவமனை கட்ட நிலம் வாங்கிய ரஜினி : திருப்போரூரில் 12 ஏக்கர் நிலம் பதிவு

ரஜினிக்கு சென்னை போயஸ் கார்டனில் வீடு உள்ளது. இதுதவிர கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையிலும், தாம்பரத்தை அடுத்த படப்பையிலும், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கத்திலும நிலம், பண்ணை வீடுகள் உள்ளன.

இந்த நிலையில் தற்போது சிறுசேரி மென்பொருள் பூங்கா அருகில் நாவலூரில் ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் சாலையில் ஒரு நிலத்தை வாங்கி உள்ளார் ரஜினி. இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக நேற்று காலை திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். ரஜினி வருகையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 9.45 மணிக்கு வந்த ரஜினியை பதிவுத்துறை செங்கல்பட்டு மண்டல டி.ஐ.ஜி ராஜ்குமார், மாவட்ட பதிவாளர் அறிவழகன், திருப்போரூர் சார்பதிவாளர் சக்திபிரகாஷ் வரவேற்றனர்.

பதிவுத்துறை அலுவலர்கள் ரஜினியை புகைப்படம் எடுத்து பயோமெட்ரிக் கைரேகை பதிவு செய்தனர். 12 ஏக்கர் இடம் வாங்கியுள்ளதாகவும், மொத்தம் 6 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பத்திரபதிவு முடிந்து 10.30 மணிக்கு ரஜினி புறப்பட்டு சென்றார். ரஜினி வருகையை அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்தபடி சென்றார் ரஜினி.

நடிகர் தனியாக ஒரு மருத்துவமனை கட்ட இருப்பதாகவும், இதில் ஏழைகளுக்கு இலவசம், வசதி படைத்தவர்களுக்கு கட்டணம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் இதனை அவர் நடத்த இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.