போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது தலைமாறைவாக இருக்கும் அவரைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துத் தேடிவருகிறது.
இச்சூழலில் இவரின் தயாரிப்பில் உருவாகி வரும் அமீரின் `இறைவன் மிகப்பெரியவன்’ வெளியீட்டிற்குத் தயாராக இருந்த மங்கை உள்ளிட்ட படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து அமீர், “என்னைச் சுற்றி என்ன நடக்கிறது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை; இது குறித்து ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். சட்ட விரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முன்பு கூறியிருந்தார்.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் சிலர், அமீரும் ஜாபரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், அமீர் ஆரம்பித்திருக்கும் உணவகத்தையும் குறிப்பிட்டு `இருவரும் நெருங்கிப் பழகியவர்கள். ஜாபர் பற்றி அமீருக்கு எப்படி தெரியாமல் இருக்கும்’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது பேசுபொருளாக, தற்போது வீடியோ ஒன்றை அமீர் வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் விவகாரத்தில் என்னுடை நிலைப்பாட்டை நான் தெளிவாகக் கூறிவிட்டேன். இருப்பினும் சிலரும், என் மீது பேரன்பு கொண்டவர்களும்கூட சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் குற்றச் செயலோடு என்னைத் தொடர்புப்படுத்தி பேசுவதைப் பார்க்கிறேன்.
அவர்கள் அனைவருக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விருப்புகிறேன். அடிப்படையாகவே மது, வட்டி போன்ற விசயங்களுக்கு எதிரான சித்தாந்தத்தைக் கொண்ட மார்க்கத்தைப் பின்பற்றுகிறவன் நான். நீங்கள் இதுபோன்ற குற்றச் செயல்களில் என்னை தொடர்புபடுத்திப் பேசுவதால் என் பெயருக்குக் களங்கத்தையும், என் குடும்பத்தினருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்த முடியுமே தவிர வேறு எந்தப் பயனையும் உங்களால் அடைந்துவிட முடியாது.
நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு காவல் துறையினரும், அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளும் இருக்கின்றனர். அவர்கள் எப்போது என்னை அழைத்தாலும் நான் விசாரணைக்குத் தயாராகவே இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சோதனைக் காலத்திலும் எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இறைவன் மிகப் பெரியவன்” என்று தன்னைப் பற்றி பரவிவரும் செய்திகளுக்கு விளக்கமளித்துப் பேசியுள்ளார்.