சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் குல்தீப் சிங் பதனியாவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 6 காங்கிரஸ் எம்எல்ஏ.,க்களும் தங்களின் மீதான நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) இமாச்சல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் பூடோ, ரவி தாக்கூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகிய 6 எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஒரே ஒரு தொகுதிக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தனர். மேலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான வாக்கெடுப்பின்போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதன் காரணமாக, அரசுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது, உடனடியாக அமலுக்கு வருகிறது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து 6 அதிருப்தி எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனிடையே மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு அதிருப்தி எம்எல்ஏகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகுதி நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகள் காலியாகியுள்ளன. இதனால் இமாச்சல் சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 40-லிருந்து 34 ஆக குறைந்துள்ளது. பாஜக வசம் 25 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரே ஒரு மாநிலங்களவைக்கான இடத்தில் பாஜக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவால் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு தற்போது குறைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி அனுப்பி வைத்த மத்தியப் பார்வையாளர் டி.கே.சிவகுமார் வியாழக்கிழமை தெரிவித்தார். பூபேந்திர ஹுடா, பூபேஸ் பாகல், மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் இமாச்சல் காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் ஆகியோருடன் இணைந்து அளித்த பேட்டியின் போது டி.கே.சிவகுமார் கூறியதாவது: “அனைத்து உட்கட்சி முரண்பாடுகளும் களையப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் உட்கட்சி முரண்கள் ஏற்பட்டால் அதனை தணிப்பதற்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் காங்கிரஸ் அரசு அதன் முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும். கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அனைத்து எம்எல்ஏக்களும் உறுதி எடுத்துக்கொண்டனர்.” எனத் தெரிவித்தார்.
ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களின் மீதான நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முற்றுப்புள்ளி அருகே மீண்டும் சில புள்ளிகள் போல தொடர்ந்து கொண்டிருக்கின்றன இமாச்சலப் பிரதேச அரசியல் சர்ச்சைகள்.