சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு நேரடியாக பணம் விநியோகம் செய்யப்பட்டது.
அதேநேரம் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் 5.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் சென்னையில் மட்டும் ரேஷன் கார்டு இல்லாத 4.90 லட்சம் பேர் நிவாரண தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அடுத்ததாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் விண்ணப்பங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் விண்ணப்பங்களும் பெறப்பட்டன. விண்ணப்பித்த 5.5 லட்சம் பேரின் ஆவணங்கள் பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பிலிருந்து சொல்லப்பட்ட நிலையில், இன்று விண்ணப்பித்தவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ரூ.6000 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பு இன்றி வரவு வைக்கப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்கள் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.