'வணங்கான்' படத்தில் நடித்தபோது பாலா அடித்து துன்புறுத்தினாரா? : மமிதா பைஜு மறுப்பு
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா, கிர்த்தி ஷெட்டி நடித்தனர். பின்னர் சூர்யா விலகியதை தொடர்ந்து கிர்த்தியும் விலகினார். அதன் பிறகு நாயகி ஆனவர் மலையாள நடிகை மமிதா பைஜூ, அவரும் திடீரென விலக தற்போது அருண் விஜய்யும், ரோஷினி பிரகாஷூம் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்திலிருந்து விலகிய மமிதா பைஜு, பாலா தன்னை அடித்து துன்புறுத்தியதால்தான் படத்திலிருந்து விலகியதாக தெரிவித்த கருத்துக்கள் வைரலாகின.
அதில், ‛‛பாலா இயக்கிய 'வணங்கான்' படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்தபோது, முதலில் நான் ஒப்பந்தமாகி இருந்தேன். படத்தில் 'வில்லடிச்சா மாடன்' என்றொரு கலை இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆட வேண்டும். இதில் எனக்கு எந்தவிதமான முன் அனுபவமும் இல்லை. ஆனால், படத்தில் அனுபவம் வாய்ந்த கேரக்டர் இதைச் செய்ய வேண்டும். இதை எப்படிச் செய்வது என்பது குறித்து பாலா, அந்தக்கலையில் தேர்ந்த பெண்ணிடம் செய்து காட்டும்படி சொன்னார்.
அவர் செய்து காட்டிய பிறகு பின்பு பாலா, 'ஓ.கே. இப்போது நாம் டேக் போகிறோம்' என்று சொன்னார். நான் அதிர்ச்சி அடைந்தேன். காரணம், அதற்கு நான் இன்னும் தயாராகவில்லை. அவர்கள் என்ன பாடுகிறார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை. அதை நான் தெளிவாக கற்றுக்கொள்ள நேரம் தேவைப்பட்டது. நிறைய டேக்குகள் எடுத்தேன்.
அப்போது பாலா என்னை நிறைய திட்டினார். “நான் அவ்வப்போது திட்டுவேன். அதை எல்லாம் நீ பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று அவரே சொல்லியிருந்தார். ஒரு சில சமயங்களில் என்னை தோள்பட்டையில் அடித்தார்'' என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதனை மறுத்துள்ளார் மமிதா.
இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு: ‛‛பாலா என்னை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை. நான் பேசிய பெரிய பேட்டியில் ஒரு சின்ன பகுதியை மட்டும் எடுத்து அதை பெரிய விஷயமாக மாற்றி விட்டனர். அதை நான் முழுமையாக மறுக்கிறேன். பாலாவுடன் 1 வருடம் வேலை பார்த்துள்ளேன். அவருடைய குழுவினர் என்னை நன்றாகவே கவனித்துக் கொண்டனர். மற்றவர்களுக்கு கொடுத்ததை விட அதிகமான சுதந்திரத்தை எனக்கு பாலா கொடுத்தார். படத்திலிருந்து சூர்யா விலகியதால் நானும் விலக முடிவெடுத்தேன். தொழில்ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே அந்தப் படத்திலிருந்து விலகினேன் என்றார் மமிதா.