Pulsar NS125 Bike: பஜாஜ் நிறுவனம் டூ வீலர் தயாரிப்பில் இந்திய சந்தையில் முன்னணி வகித்து வருகிறது. அதிகளவு மைலேஜ் தரும் பைக்குகள் முதல் லுக்கில் மிரட்டும் ஸ்போர்ட்ஸ் பைக் வரை பல்வேறு தயாரிப்புகளை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. உதாரணத்திற்கு அதிக மைலேஜ் தரும் பைக் என்றால் பஜாஜின் Platina பைக்கை கூறலாம்.
அதேபோல், பஜாஜில் ஸ்போர்ட்ஸ் பைக் என்றால் அது Pulsar தான். அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும் அதன் ஒவ்வொரு மாடலுக்கும் வாடிக்கையாளர்களிடயே நிலவும் வரவேற்பும், ஆரவாரமும் சொல்லில் அடங்காதது. பொல்லாதவன் படத்தில் நாயகன் தனுஷிற்கு Pulsar மேல் மோகம் இருப்பதாக காட்டப்பட்டதற்கு காரணம் அந்த நேரத்தில் நிலவிய டிரெண்டை குறிப்பிடத்தான். 2001ஆம் ஆண்டிலேயே பல்சர் இந்தியாவுக்கு அறிமுகமான நிலையில், பொல்லாதவன் திரைப்படம் 2007இல் வெளியானது.
அந்த வகையில், 20 வருடங்களுக்கு மேலாக Pulsar மேல் பித்துப்பிடித்து அலையும் பைக்கர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை மகிழ்விக்கும் வகையில், பஜாஜ் நிறுவனம் Pulsar பைக்கில் பல புதிய மாடல்களை அப்கிரேட் செய்து அறிமுகப்படுத்தி உள்ளது. அதில், Pulsar NS125 பைக் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டது.
பஜாஜ் Pulsar NS125 2024ஆம் ஆண்டு பதிப்பு இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் வடிவமைப்பும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட NS160 மற்றும் NS200 உள்ளிட்ட மாடல்களின் வடிவமைப்பும் ஒன்றுபோல் உள்ளது.
Pulsar NS125 புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை கொண்டுள்ளது. இந்த பைக்கில் தண்டர் வடிவத்திலான எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் ABS பிரேக்கிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது Hero Xtreme 125R, TVS Raider 125, Honda SP 125 ஆகிய பைக்குகளுக்கு கடுமையான போட்டியை அளிக்கும்.
NS125 பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலை வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் உடன் பைக்கை இணைத்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்துகின்றன. இதனால் பயனர்கள் க்ளஸ்டரில் SMS மற்றும் அழைப்பு தொடர்பான நோட்டிபிக்கேஷனை பெறலாம். இதனுடன், போனை சார்ஜ் செய்ய USB போர்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
பைக் வடிவமைப்பு
இந்த பைக்கின் எரிபொருள் டேங்க் மற்றும் சைட் பேனலில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இதன் முன்புறத்தில் தண்டர் வடிவில், அதாவது மின்னல் வடிவில் எல்இடிஹெட்லேம்ப் உள்ளது. இது உயர் மற்றும் குறைந்த பீம் அமைப்புடன் வருகிறது. அதைச் சுற்றி டிஆர்எல் பொருத்தப்பட்டுள்ளது.
எஞ்சின் முதல் விலை வரை
NS125 பைக்கில் 125cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 11.8 php பவரையும், 11 Nm டார்க்கையும் வழங்கும். மேலும் இதில் கியர் ஷிப்ட் செய்ய 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை 1 லட்சத்து 4 ஆயிரத்து 922 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பஜாஜ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக் வாடிக்கையாளர்களுக்கு பல வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.