வரலட்சுமியின் அம்மா சாயா தேவி தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்திருப்பதுதான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்.
மிஸ் பெங்களூரு பட்டம் வென்று சமூக ஆர்வலராக பயணத்தைத் தொடங்கிய சாயா தேவி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியான நிலையில், சாயா தேவியிடம் வாழ்த்துகள் சொல்லி பேசினேன்.
“நடிப்பு என்னுடைய தொழில் கிடையாது. மகள் ஆரம்பித்த சேவ் சக்தி அறக்கட்டளை மூலமா நிறைய சமூக சேவைகள் செய்துக்கிட்டு வர்றேன். இந்த நிலையிலதான் நெருங்கிய குடும்ப நண்பர் எடுக்கும் படத்தில் நீங்கதான் நடிக்கணும்; இந்த கேரக்டருக்கு வேற யாரும் செட் ஆகமாட்டாங்க; நீங்கதான் கரெக்டா இருப்பீங்கன்னு கேட்டாங்க. ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கான கேரக்டர். அதனால, ஒப்புக்கிட்டேன். எனக்கு நடிப்பு புதுசு. ஆனா, என் பொண்ணு வரலட்சுமி சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட். அப்படி, பிரமாதமா நடிப்பாங்க. ரீ-டேக்கே போகமாட்டாங்க.
என் குடும்பமே நடிப்புத்துறையில் இருந்தாலும், நான் நடிக்கிறதுக்கு தயக்கப்படுவேனோன்னு நினைச்சு வரலட்சுமிதான் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாங்க. சின்ன கேரக்டர்தான். ஆனா, பேசப்படபோற கேரக்டரா இருக்கும். என் பொண்ணுகிட்டேயிருந்து டிப்ஸ் வாங்கி, நான் சினிமாவுல நடிச்சது மறக்கவே முடியாத அனுபவம்.
‘வணங்கான்’ படத்துல நடிச்சிருக்கேன்னு தகவல் வெளியாகியிருக்கிறது பத்தி இப்போதைக்கு என்னால சொல்ல முடியாது. என்ன படம் யார்க்கூட நடிக்கிறேன், என்ன கேர்கடர் நடிக்கிறேன்னு ஷேர் பண்ணிக்கமுடியாது. ஆனா, ஒரு முக்கியமான இயக்குநரோட படத்துல சீனியர் ஆர்டிஸ்டோட நடிக்கிறேன். நல்ல கதை, ரசிக்கவைக்கும் திரைக்கதை. ரிலீஸாகும்போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க. இதேமாதிரி, இன்ட்ரஸ்டிங்கான கேரக்டர் கிடைச்சுதுன்னா கண்டிப்பா தொடர்ந்து நடிப்பேன்” என்கிறார்.