பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிரபல உணவகம் ஒன்றில் இன்று (மார்ச் 1) மதியம் மர்மப் பொருள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். கட்டிடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு குண்டனஹல்லி இருக்கிறது பிரபல உணவகமான ராமேஸ்வர கஃபே. இந்தப் பெயரில் நகரெங்கும் பல கிளைகள் இயங்குகின்றன. மக்கள் கூட்டம் எப்போது அலைமோதும் இந்த உணவகத்தின் ராஜாஜி நகர் கிளையில் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது. சுற்றியிருந்தவர்கள் சென்று பார்த்தபோது உணவகத்தின் முகப்புப் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததது. உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்நிலையில், உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என சிலர் காயமடைந்துள்ளனர். 5 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதுவரை வெடித்தது என்ன, காரணம் என்னவென்று எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் சில ஊடகங்களில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உணவகத்தில் திடீரென ஏற்படும் வெடிப்பு அடங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்.பி. கேள்வி: பெங்களூரு தெற்கு பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “இப்போதுதான் நான் ராமேஸ்வரம் கஃபே உரிமையாளரிடம் தொலைபேசியில் பேசினேன். வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற கைப்பையில் இருந்துதான் ஏதோ வெடித்துள்ளது. சிலிண்டர் ஏதும் வெடிக்கவில்லை என்றார். இது ஏதோ குண்டு வெடிப்பு போல் தான் உள்ளது. பெங்களூரு மக்களுக்கு முதல்வர் சித்தராமையா தெளிவான பதிலைத் தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Just spoke to Rameshwaram Café founder Sri Nagaraj about the blast in his restaurant.
He informed me that the blast occurred because of a bag that was left by a customer and not any cylinder explosion. One of their employees is injured.
It’s seems to be a clear case of bomb…
— Tejasvi Surya (@Tejasvi_Surya) March 1, 2024
இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்துள்ளனர். அதேபோல் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களும் அங்கே வந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.