ஒப்பந்த விவகாரம்: பி.சி.சி.ஐ. கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது – விருத்திமான் சஹா

புதுடெல்லி,

இந்திய அணியின் 2023- 2024 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பி.சி.சி.ஐ. அறிவித்தது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய 2 வீரர்களை பி.சி.சி.ஐ. அதிரடியாக நீக்கியது. இந்த நடவடிக்கை இந்திய கிரிக்கெட்டில் கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் பி.சி.சி.ஐ-யின் இந்த முடிவு குறித்தும், இளம் வீரர்களின் முடிவு குறித்தும் கருத்து தெரிவித்துள்ள இந்திய வீரரான விருத்திமான் சஹா கூறுகையில் : இது பி.சி.சி.ஐ.யின் முடிவாக இருக்கலாம். ஆனால் வீரர்களின் தனிப்பட்ட முடிவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். பி.சி.சி.ஐ. கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது. நான் எப்போதெல்லாம் பிட்டாக இருந்திருக்கின்றேனோ அப்போதெல்லாம் கிளப் போட்டிகள், ஆபீஸ் போட்டிகள் என அனைத்திலுமே பங்கேற்று விளையாடி உள்ளேன்.

நான் எப்பொழுதுமே ஒரு போட்டியை போட்டியாகத்தான் பார்க்கிறேன். அது எவ்வித போட்டியாக இருந்தாலும் எனக்கு சமமாகத்தான் தெரியும். சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகள், கிளப் போட்டிகள் என்று எதையும் நான் பிரித்து பார்ப்பது கிடையாது. இப்படி அனைத்து வீரர்களுமே அனைத்து போட்டிகளையும் சமமாக பாவித்து விளையாடினால் அது அவர்களின் கெரியருக்கும் நல்லது, இந்திய அணிக்கும் நல்லதாக அமையும்.

சர்பராஸ் கான் உள்ளூர் போட்டிகளில் கடந்த 4-5 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடியதால்தான் இந்திய அணியில் தற்போது இடம் பிடித்து விளையாடுகிறார். நிச்சயம் அவர் அதற்கு தகுதியானவர். அதேபோன்று துருவ் ஜூரெல் ஆட்டத்தை நான் உள்ளூர் கிரிக்கெட்டில் பார்த்தது கிடையாது. தற்போது அவர் விளையாடி வரும் ஆட்டத்தை கூட நான் பார்க்கவில்லை. இருந்தாலும் அவர் ஒரு நல்ல வீரர் என்று தெரிகிறது. அதனால்தான் கடைசி போட்டியில் அவர் நமக்கு வெற்றியை பெற்றுத்தந்தார்’ என்று கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.