500 விக்கெட்டுகள் வீழ்த்துவது ஒன்றும் ஜோக் அல்ல அஸ்வினுக்கு கங்குலி பாராட்டு

தர்மசாலா,

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

இந்த போட்டி இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது. இந்திய அணிக்காக இதுவரை 312 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடியுள்ள வேளையில் 13 வீரர்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இந்த சாதனை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினும் இணைய உள்ளார்.

முன்னதாக இந்த தொடரின் 3-வது போட்டியில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.

இந்நிலையில் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுப்பது ஜோக் அல்ல என்று ரவிச்சந்திரன் அஸ்வினை முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி பாராட்டியுள்ளார். மேலும் ஜடேஜா, குல்தீப், அஸ்வின் ஆகியோரால் இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழ்வதாக பெருமிதம் தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

“அஸ்வின் ஆல் டைம் கிரேட். எந்த காலத்திலும் அவர் சிறப்பான வீரர். 500 விக்கெட்டுகள் எடுப்பது ஜோக் அல்ல. ரவீந்திர ஜடேஜா தற்சமயத்தில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர். அவர் இந்திய சூழ்நிலைகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் துறையில் அசத்தக்கூடியவர். அதேபோல குல்தீப் யாதவ் சிறப்பாக கம்பேக் கொடுத்தார் என்று நினைக்கிறேன். அவர் தற்போது பெரிய அளவில் முன்னேறியுள்ளார். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இருப்பதால் அவர் எந்த வகையிலும் குறைவாக செயல்படவில்லை. இந்த தொடரில் தன்னுடைய முத்திரையை பதித்துள்ள அவர் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடுவார்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.