மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி மீனா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வேகபந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், “கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய கிரிக்கெட் வீரர் நடராஜன், “எந்த துறையை தேர்வு செய்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். 20 வயதில் ஒரு லட்சியம் வைத்து முன்னேறினால் 30 வயதில் இலக்கை அடைய முடியும். லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. நான் படிக்கும்போது நல்லா ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன். கிரிக்கெட் விளையாடும் பொழுது மூத்தவனாக நீ எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுகிறார்கள் என்று பேசினார்கள்.
இன்று சாதித்த பிறகு எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்கிறார்கள். இதுதான் உலகம் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இப்பொழுது கிராமப்புறம் மட்டுமன்றி அனைத்து இடங்களிலும் செல்போன்கள் வைத்து விளையாடுகின்றனர். உடலுக்கு ஆரோக்கியமாக நல்ல காற்றில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
அனைத்து விளையாட்டுகளும் அவசியம். அதேபோல் படிப்பும் அவசியம். ஆனால் படிப்பிற்கும் எனக்கும் தூரம். படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்ற நடராஜன், இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு என்றார். படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன் என நடராஜன் உருக்கமாக பேசினார். அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால் தான் முன்னேற முடிகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் அனைவரும் சாதிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் தன்னடக்கமும் முக்கியம் என்றும் நடராஜன் பேசினார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் மாணவ மாணவிகள், இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.