ரூ.8,470 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப கிடைக்கவில்லை – ரிசர்வ் வங்கி தகவல்

புதுடெல்லி,

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு மே 19-ந்தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2023 மே 19-ந்தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட தினத்தில் வணிகம் முடிவடையும்போது மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2024 பிப்ரவரி 29-ந்தேதி வணிகம் முடிவடையும்போது புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.8,470 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் சுமார் 97.62% திரும்ப பெறப்பட்டு விட்டதாகவும், இன்னும் சுமார் 8,470 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.