இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் மார்ச் 7ஆம் தேதி நடக்கிறது. இப்போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவனை இந்திய அணி அறிவித்திருக்கிறது. அதன்படி கடைசி டெஸ்ட் போட்டியிலும் கேஎல் ராகுல் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சர்ஃபிராஸ்கான் அந்த போட்டியில் விளையாட இருக்கிறார். இப்போது இந்திய அணியில் விளையாடிய வீரர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டனர். தர்சமசாலாவில் நடைபெறும் கடைசி போடிக்கு மீண்டும் மார்ச்5 ஆம் தேதி ஒன்றுகூட இருக்கின்றனர்.
இந்திய அணி வீரர் சுப்மன் கில் தனது சொந்த ஊரான மொஹாலி சென்றுள்ளார். ஓய்வுக்காக சென்றிருந்தாலும் கடைசி டெஸ்ட் போட்டிக்காக தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு பயிற்சியாளராக அவரது தந்தையே மாறியுள்ளார். தந்தை பந்துவீச சுப்மன் கில் பேட்டிங் பயிற்சி எடுத்தார். இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் இப்போது வெளியாகியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்ததால் சுப்மன் கில் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியது. அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என குரல்கள் எழுந்த நிலையில், விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் சதமடித்து கம்பேக் கொடுத்தார்.
அதன்பிறகு நடைபெற்ற ராஜ்கோட் மற்றும் ராஞ்சி டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால் அவர் மீது எழுந்த விமர்சனங்கள் எல்லாம் காணாமல் போனது. கடைசி டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆட பயிற்சி எடுக்கும் சுப்மன் கில், அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். ஏனென்றால் இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணி இவரது தலைமயில் தான் முதன்முறையாக களம் காண இருக்கிறது.
அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றுவிட்டதால், கில்லை கேப்டனாக நியமித்திருக்கிறது குஜராத் டைடன்ஸ். இந்த பொன்னான வாய்ப்பை தனக்கான அடையாளமாக மாற்றிக் கொள்ளவும் கில் தீவிர வலைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். ஐபிஎல் 2024 மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன.