புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தசவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் இணைந்து ஐக்கியஅரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலி நடத்தி வந்தனர்.
இந்த செயலி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோதமாக பணம் திரட்டி வந்த இவர்கள் சத்தீஸ்கரை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர். இந்த முறைகேட்டில் சுமார் ரூ.6,000 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறை கருதுகிறது.
இது தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை 9 பேரைகைது செய்துள்ளது. இதுகுறித்துஅமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
இந்த வழக்கில் தொடர்புடைய ஹரிசங்கர் திப்ரிவால் என்ற ஹவாலா ஆபரேட்டர் தற்போதுதுபாயில் வசிக்கிறார். இவர்மகாதேவ் செயலி உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்திருந்தார். மேலும் ‘ஸ்கை எக்ஸ்சேஞ்ச்’என்ற சூதாட்ட செயலியை நடத்தி வந்தார். சோதனைக்கு பிறகுதிப்ரிவாலுக்கு சொந்தமான ரூ.580.78 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. ரூ.3.64 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.