ரூ.51,000: உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு, மருமகனுக்கே மகளை மணமுடித்த பெற்றோர் – உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண்களின் திருமண உதவித்தொகையாக `விவஹேது’ என்ற திட்டத்தின் மூலம் ரூ.51,000 வழங்கப்படுகிறது. இதில் ரூ.35,000 நேரடியாக மணப்பெண்ணின் வங்கிக் கணக்குக்கும், சீர்வரிசைக்காக ரூ.10,000, மண விழாவிற்காக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பல்லியா மாவட்டத்தில் 200 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

யோகி ஆதித்யநாத்

அதில் ஏற்கெனவே திருமணமானவர்கள், பணத்துக்காக மீண்டும் திருமணம் செய்துகொண்டது, போலியாக திருமணம் செய்துகொண்டது, சம்பந்தமில்லாதவரைக்கூட ஒப்பந்த அடிப்படையில் மணமகளாக, மணமகனாக அழைத்துவரப்பட்டது என பல்வேறு மோசடிகள் நடந்தன. அதனால், இந்தத் திட்டத்தின்கீழ் திருமணம் செய்துகொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி ஜான்சி மாவட்டத்தில் 132 ஜோடிகளுக்கு அரசு இலவச திருமணம் நடத்தி வைத்தது. இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குஷி என்ற பெண்ணுக்கும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விருஸ்பன் என்பவருக்கும் திருமணம் முடிவாகி, நடைபெறவிருந்தது. அப்போது மணமகன் திருமணத்துக்கு வரவில்லை எனத் தெரிகிறது.

திருமணம்

இதனால் பதற்றமடைந்த பெண்ணின் பெற்றோர், நிதியுதவி ரூ.51,000 கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்து, தன்னுடைய மூத்த மகளின் கணவரையே, இளைய மகளுக்கு மணமுடித்திருக்கிறார்கள். இது தொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், அதிகாரிகள் உடனே விசாரணையைத் தொடங்கினர். அப்போதுதான் திருமணத்திற்கு முன்னர் கொடுத்த விண்ணப்பத்தில் மணமகன் மணமகளின் ஆதார் அடையாள எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்காமல் இருந்தது தெரியவந்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச சமூகநலத்துறை அதிகாரி பேசும்போது, “இன்னும் அவர்களுக்குத் திருமண நிதியுதவி வழங்கப்படவில்லை. குஷி விஷயத்தில் யார் தவறு செய்தார்கள் எனக் கண்டறியப்படும். மேலும், குஷியின் வீட்டிற்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.