'உலகக் கோப்பைக்காக ஐபிஎல் தொடரை தூக்கி எறிந்தவர்… ஷ்ரேயாஸ் ஐயர்' – வெளியான தகவல்!

Shreyas Iyer BCCI Contracts: இந்தியாவில் சினிமா மற்றும் கிரிக்கெட் மீதான ஆர்வம் என்பது யாராலும் சொற்களில் விவரிக்க முடியாத ஒன்றாகும். தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்து பிரபலமாக வேண்டும் என்ற ஆவலில் எத்தனையோ பேர் சென்னையின் சாலிகிராமத்திலும், வடபழனியிலும், கோடம்பாக்கத்திலும் கனவோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது நிச்சயம் பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு, ஒரு துளியும் குறைவில்லாத ஆர்வம்தான் கிரிக்கெட்டின் மீதும். 

கிரிக்கெட்டின் மீது இத்தகைய ஆர்வம் இருப்பதால், இங்கு வீரர்கள் ஒரு பெரிய அரசியல் தலைவரை போல் கொண்டாடப்படுகிறார்கள் எனலாம். சச்சின் டெண்டுல்கரிடம் தொடங்கிய இந்த போக்கு தற்போது வெறும் இரண்டு போட்டியை மட்டும் விளையாடியிருக்கும் துருவ் ஜூரேல் வரை தொடர்கிறது எனலாம். தோனி ஐபிஎல் விளையாட எங்கு சென்றாலும் ஒரு பெரும் படையே அவரை பார்க்க செல்கிறது, விராட் கோலி என்ன சாப்பிட்டு இப்படி ஃபிட்டாக இருக்கிறார் என்பதை ரசிகர்கள் தெரிந்துகொள்ள விருப்பப்படுவது என இந்த லிஸ்ட்டை சொல்லிக்கொண்டே போகலாம். 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கூட கிரிக்கெட் வீரர் என்ற தனிநபருக்கு இத்தகைய கொண்டாட்ட போக்கு இல்லை எனலாம். அந்த வகையில், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரை அதிரடியாக மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது பெரும் விவாதத்தை கிளப்பியது. நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பல கேள்விகள் எழும் என்பதை மனதில் வைத்தும் பிசிசிஐ தயங்காமல் இந்த முடிவை அறிவித்தது. இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஆகியோர் மீண்டு வருவார்கள் என ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்த நிலையில், இவர்களை ஒப்பந்தப் பட்டியலில் இருந்து தூக்கியதற்கு மதன் லால் வரவேற்பு தெரிவித்தார். 

இப்படி ஒவ்வொருவருக்கும் இவர்களின் நீக்கம் குறித்து பல கருத்துகள் இருந்தாலும், தற்போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு நெருக்கமான ஒருவரும், அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒருவரும் ஊடகம் ஒன்றுக்கு தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில்,”கேகேஆர் அணியின் முகாமில் விளையாடிய ஒரு அமர்வில் 60 பந்துகளை சந்தித்த பிறகு ஷ்ரேயாஸ் ஐயரின் முதுகில் பிடிப்பு ஏற்பட்டது.

இப்போது அவர் ஒரு அமர்வுக்கு 200 பந்துகளை விளையாடுகிறார். மூன்று வாரங்களில், மூன்று கிலோ தசைகளை வளர்த்துள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கம் மற்றும் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் (ஓம்கார் சால்வி) ஆகியோர் பார்வையில் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளார். 

குறிப்பாக, மும்பை பயிற்சியாளர் ஷ்ரேயாஸ் ஐயரின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க பலமுறை கேகேஆர் அகாடமிக்கு வந்தார். இப்போது அவர் தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிக்கு தன்னைத் தயார்படுத்திக்கொண்டு அதில் விலையாடி வருகிறார்.

அவர் உலகக் கோப்பையில் விளையாட கடந்தாண்டு ஐபிஎல் தொடரை அவர் புறக்கணித்தார். அவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகும், உலகக் கோப்பைக்காக வலியின்றி இருக்க மூன்று வலி நிவாரணி ஊசிகளை எடுத்துக்கொண்டு விளையாடினார். இன்னும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியின் போது அவருக்கு மீண்டும் வலி திரும்பியது. 

இருப்பினும், அவர் தொடர்ந்து விளையாடினார். உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வே எடுக்காத ஒரே வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே. உலகக் கோப்பைக்கு பின் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடினார், அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, ஜனவரியில் ரஞ்சி ஆட்டத்தில் விளையாடும்படி பிசிசிஐ மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக அவர் மும்பை அணிக்காக விளையாடினார். ஒரு வீரருக்கு அவர் விருப்பப்பட்ட பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற சுதந்திரம் இல்லையா?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.